Wednesday, October 14, 2015

அப்பா வாருங்கள் இங்கே

அப்பாவிற்கு இன்று (14/10/2015)
அப்பா மரணிக்கும் 2 நாள் முன் 
பிறந்தநாள்.(14/10/1953).
22/102013 அன்று அவர் உயிர் பிரிந்தது.
அப்பா மறைந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ,எழுதுகின்றேன்.


இடைப்பட்ட நாட்களில் அப்பாவைப் பற்றி எழுத நினைத்ததையெல்லாம் நினைவுகளிலே கரைத்துவிட்டேன்.

ஊற்றெடுக்கும் கண்ணீரை உறைய வைக்கவும் பயிற்சியானது அப்பாவின் மரணம்.

மழலையில் ,ஆப்பி பத்டே தாத்தா என்று சொன்னதை மறந்தவள் ,தான் ஒரு முறை கூட தாத்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை  என்கிறாள் என் 9 வயது மகள்.

மரத்துப்போன மனதிற்கு மகளின் கூற்று மெல்லிய உதையாகிப்போனது....




Tuesday, December 25, 2012

சொல்லாமலே



பக்கத்து வீட்டிற்கு சென்றாலும் 

விளையாடப் போனாலும் 

பள்ளிக்கு சென்றபோதும் 

தோழிகளுடன் சென்றபோதும் 

கல்லூரிக்கு சென்றபோதும் 

அம்மா போயிட்டு வரேன்னு 
சொல்லிட்டு போவேன்,

அவசரமாய் பஸ்ஸை  பிடிக்கச் சென்ற 
ஓரிரு முறை போயிட்டு வரேம்மான்னு 
சொல்லாமல் போனதில் மாலை 
வீடு திரும்பி உன் முகத்தை 
பார்க்கும்வரை மனம் உறுத்திய 
வலியை உன்னிடம் பகிர்ந்ததில்லை.

திருமணமாகி புகுந்த வீடு செல்லுகையில் 
போயிட்டு வரேன் என்ற வார்த்தையின் 
கொடூரம் உணர்ந்தேன்.

அதன்பிறகு ஒவ்வொரு முறையும் 
கணவருடன் வந்து செல்லுகையில் 
வாசற்படி எங்கிருக்குன்னு தெரியாமல் 
மறைக்கும் கண்ணீரை தொடைத்து,

அடைத்த தொண்டைக் குழியில் 
போயிட்டு வரேம்மா என்பதும் 
மூழ்கி  மூழ்கித்   திணறும்.

கண்ணீரை 
கட்டுக்குள் வைக்க இருவரும் 
போராடுவோம் ..

இதனாலா உன் மரணப் படுக்கைக்கு 
போயிட்டு வரேன்னு
சொல்லாமலே சென்றாய்.....
உன் மனம் 
எவ்வளவு 
வேதனைப்பட்டிருக்கும்......

Thursday, August 18, 2011

மீண்டும் வருவாயா?

அம்மா நீ எங்கு இருக்கியோ,
எப்படி இருக்கியோ,
என்னுடன்தான் இருக்கியோ
தெரியவில்லை!
எங்களுடன் இருப்பதாக
நம்பிக்கை மேல் நம்பிக்கை
எனும்போது விரக்தியில்
உலாவுகிறேன்.
உன் உயிர் பிரிந்த நிமிடங்கள்
நினைவில் வந்து வந்து
என் சுவாசத்தை விழுங்குகிறது,
என்னையும் அப்பாவையும் தவிர
மற்றனைவருக்கும் உன் பிரிவு
செய்தியாகி,காற்றோடு கரைந்தாகிவிட்டது.
என் அன்னையாக வாழ்ந்ததும்
உனது அன்பும் எனக்கு மட்டுமே புரியும்.
உன் இழப்பில் புதைந்துவிட்ட
எனக்கு மட்டுமே உன் அருமை தெரியும்
என் சோகத்துக்கு மட்டும்  பிறர் மனதை
எதிர்பார்ப்பது  சரியில்லை,
நீ இறந்தபோது கிடைத்த ஆறுதல்களை
இன்றும் பிறரிடம் எதிர்பார்ப்பதும்
மற்றவர்களை சங்கடத்தில் தள்ளுவதாக
உணர்ந்துகொண்டேன்.உதட்டோர ஆறுதல்
வார்த்தைகள் கேட்டுவந்தேன்.
தினமும் நினைத்து ஏங்கும் எனக்கு
உன் நினைவு நாள் உன்னை
காப்பாற்ற முடியாமல்போன
கையாலாகாத நாளாகவே இருந்தது.
உன்னை தீயிலிட்ட அந்த கொடூர
மறுநாளை குறிப்பிட வார்த்தைகள்
தெரியவில்லை. தவச தினத்தன்று
உறைந்திருந்த என்னை அப்பாவின்
கண்ணீர் உருகவைத்தது.
பாட்டி இறந்தன்று அணிந்திருந்த
உடைகளை , முதல் தவசம் முடிந்தும்
கடலில் விட்டுவந்த அப்பாவிற்கு
நீ இறுதியாக அணிந்திருந்த
உடைகளை கடலில் போட
மனதோ,தைரியமோ இல்லை.
பார்க்க நீ இல்லையே என
வருந்தும் சம்பவங்கள் பல.
நல்லவேளை நீ இல்லையென
நினைக்கவைக்கும் சம்பவங்கள் சில.
உன் மரணத்திற்கு பிறகுதான்
எங்கு மரணச் செய்தி கேள்விப்பட்டாலும்
எந்த உயிரை தவிக்கவிட்டு,எந்த உயிர்
பிரிந்ததோயென வருந்துகிறேன்.
பெற்று வளர்த்து இதுவரை
அன்பும்,வாழ வழியும் காட்டியது
போதுமென அழைத்துச் சென்ற
காலனே!எந்த உயிரையாவது
பூமிக்கு அனுப்பும் வரம்
பெறுவாயெனில் என் அம்மாவை
எனக்கு மீண்டும் தந்துவிடு!!!
அம்மாவுடன் இனியொரு முறை
வாழவிடு அல்லது என் அம்மாவுடன்
வாழ்ந்த நாட்களை மீட்டுக்கொடு..../.

Saturday, May 21, 2011

எங்கே கரைந்து போனாய் அம்மா

உன் பார்வை படாத நானும்
அம்மா என வாய் நிறைய
அழைத்தாலும் பதில் பேசாத
புகைப்படத்தில் நீயும்,
அசையாத உருவத்தில் நின்ற
கடவுள்களிடம் எனக்காக ஓயாமல்
விளக்கேற்றி வழிபட்ட உனக்கு
விளக்கேற்றி வழிபட என் கண்ணீருக்கு
சம்மதமில்லையம்மா,
சின்ன நிகழ்வுகளையும் உன்னிடம்
பகிர்ந்த வழக்கத்தில்,என்ன நிகழ்ந்தாலும்
சொல்வதற்குமுன் நீ மறைந்துவிட்டதை
மறந்துபோய் வேதனயுற்றே,மனதில்
பதிதுந்துபோனது உன் மறைவு.
பந்தங்கள் பல இருந்தும்
நாம் இருவர் மட்டுமே
வாழ்வதாய்  எண்ணினேன்.
இப்போது உலகில் தனித்து
வாழ்வதாய் உணருகிறேன்.
நீயிருக்கிறாயென வைத்திருந்த
உன் ஸ்பரிசம்பட்ட பொருள்களில்
செல்பேசியும் களவாடப்பட்டதே,
அதை வைத்திருக்கவும் எனக்கு
அருகதையில்லையாம்மா,
வயதான அம்மாவை கைப்பிடித்து
அழைத்துச் செல்லுபவரை வழிப்போக்கில்
பார்த்துபோது இப்படியான வாய்ப்பை எனக்கு
கொடுக்காமல் போய்விட்டாயேனு கலங்குகினேன்,
பக்கத்து குழந்தை சாப்பிடுவதை பசியுடன்
பார்க்கும் குழந்தை போல் பார்க்கிறேன்
அம்மாவுடன் வாழ்பவர்களை.
உனக்கு சாந்தி என் மகிழ்ச்சிதான்
என்றாலும் எதற்காகவாது சிரித்து
மகிழும்போது அந்த சாப்பிடும்
குழந்தையாய் நானும் புகைப்படத்திலிருந்து
நீ வேடிக்கை பார்ப்பது போன்றும்
உணருகிறேன்.உன் பாச அருவியில்
நனைந்தில் இன்று எனக்கு வந்த நிலை,
நாளை உன் பேத்திக்கு வேண்டாமென்று
குழந்தையிடம் அன்பில்
சிக்கனமாக இருக்கின்றேன்.
நான் வருவது தெரிந்தால்
மகிழ்ச்சியில் உறங்காமல்
என்னை பார்க்கும் தினமும்
நிமிடமும் இப்போதே
வந்துவிடாதாயென
ஏங்கிக்கொண்டிருப்பாயே,
இந்த வழியாக இந்த வாசலுக்குதான்
வருவாள்,வந்துவிடுவாள் பார்ப்பதை
நிறுத்துயென கண்கள் காலில் விழுந்து
கேட்காத குறையாக கேட்டும்
வாசலிலே காத்திருந்து பூரித்த
முகத்துடன் என்னை வரவேற்த்து
உபசரிப்பாயே,இப்போது
அதே வழி வாசலுக்கு உன்
நினைவுகளை சுமந்து வருகிறேன்
பல முதல்கள் செய்த உனக்கு
முதல் வருட திதி கொடுக்க….








Monday, January 3, 2011

மறைந்த அம்மாவிற்கு

எனக்கு பிடித்ததை மட்டுமே
செய்து ஒவ்வொன்றும்
பார்த்து பார்த்து வாங்கிக்
கொடுத்த பொருள்களுடன்
ஞாபகமாய் நீ உபயோகித்த
        பொருள்களையும் வைத்துருக்கிறேன்,
நீ இடுகாட்டுக்கு போனவுடன் 
அழுதால் சாந்தி பெறமாட்டாயென
சிலர் சொன்னதால் அன்று இரவு
வரை சேமித்த கண்ணீர்
இப்போதும் கசிகிறது !
 மறைந்த உனக்கு,படைப்பதற்காக
       வைக்கப்பட்ட பொருள்களுடன்,அம்மாவிற்கு
      பிடித்த பதார்த்தமும் வைக்க சொன்னபோது 
       உனக்கு என்ன பிடிக்கும்னுகூட  தெரியாமல்
வளர்ந்ததை நினைத்து வெக்கிய என்னை 
உனக்கு பிடித்த நானிருக்க வேறென்ன 
பிடிக்கப்போகிதுறன்னு  பொருமிய மனதுடன்
அப்பாவிடம் சென்று விசாரித்தேன்.
வீட்டாருக்கும்,உறவினருக்கும்
எத்தனை இனிப்புகளும்,காரங்களும்
விருந்துகளும் அலுக்காமல்
செய்த உனக்காம்மா 
படையல்!
என்னால் தாங்க முடியலம்மா! 
 வாழ்ந்த போது கனவில் வந்தால்
மறந்து போன நான்,மறைந்த பிறகு 
என் கனவில் வரும் உன்னை
யோசித்து,யோசித்து ஞாபக அறையில்
சேமிக்கிறேன். வரப்போகும்
நாள்களுக்கெல்லாம் ஒரு அர்த்தமிருக்கலாம்
வருடத்தில் ஒரு முறை வரப்போகும்
என்னை நீ பிரசவித்த நாளுக்கு
என்ன அர்த்தமம்மா?இனி
அந்த நாள் எனக்கு என்ன நாளம்மா?
அந்த நாளில் என்ன செய்வேனம்மா?
மனிதர்களே!உங்கள் பிறந்த நாளை
உங்களுக்காக கொண்டாடுவதை
தவிர்த்து பெற்றோருக்காக
கொண்டாடுங்கள்!!
உனக்கு பிடித்த நிறத்திலே
எழுத்துக்களை பதிந்ததை விட
என்னால் ஒன்றும் செய்ய முடியாமல்
போய்விட்டதேம்மா?
அவ்வப்போது ம்மா,ம்மா என்று
அழைக்கிறேன் உன்
பேத்தியை...

Sunday, January 2, 2011

அம்மாவின் சுவாசம் நின்ற நாள்

எட்டாம் நாள் (ஜூன் /28 /2010) பொழுது விடிந்தது,நைட் டுட்டியிளிருந்த டாக்டர் வந்தார்,காலை டூட்டிக்கு வரும் டாக்டர் பாத்துக் கொள்வாறேன்றார்.வெறும் ஆக்சிஜன் வச்சுருக்கிங்க,வேற எதுவும் ட்ரீட்மன்ட் எப்ப தொடங்குவீங்கனு கேட்ட போது அவருக்கு கோபம் வந்தது,அவங்க உடம்பு தாங்கும் நிலை வந்தால்தான் எதுவும் செய்ய முடியும்.எங்களுக்கு தெரியும் எப்ப என்ன செயயனும்னு சொன்னார்.இரவு வைத்த சலின் கால் பாட்டில் கூட குறையல,நர்சிடம் ஏன் இவ்ளோ ஸ்லோவா வச்சுருக்கீங்கனு கேட்டால் டாக்டர் சொல்வதைத்தான் நாங்க செய்ய முடியும்னு பதில் வந்தது.எங்களால் என்ன செய்ய முடியும்,உடல் நிலை மோசமான அம்மாவை மருத்துவ மனையில் ஒப்படைத்து விட்டோம்,எங்களால் பணத்திற்கான ஏற்பாடும்,வேடிக்கயும்தான் பாக்க முடிந்தது.அம்மா பூனம் புடவைதான் உடுத்தியிருந்தாங்க .காலையில் இரு ஆண்கள் (வார்ட் பாய்)வந்து பெட்சீட் மாத்த வந்தாங்க,அப்போ அம்மா ஆச்சி என் புடவையை காலில் நல்லா இழுத்துவிடு,வயிற்ரை மூடிவிடுன்னு சொன்ன போது கொடுமையாக இருந்தது.அந்த வார்ட் பாய் நைட்டி போட்டுகங்கம்மா,நாளைக்கு காலையில் நாங்கதான் சுத்த படுத்த வருவோம்,முதுகில் பவுடர் பூசனும்,படுத்தே இருப்பதால் கஷ்டமாயிருக்கும்,கவலைப்படாதிங்க சரியாகிடுவீங்கன்னாங்க,இன்னொருவர் பயப்டாதிங்கம்மன்னார். உள்ளே வந்த அப்பாவிடம் நைட்டி போட சொல்றாங்கன்னேன்,கடை திறந்தவுடன் வாங்கலாம்னார்,(இது வரை நைட்டி அணிந்து பழக்கமில்லாத அம்மா)எனக்கு வேண்டவே வேண்டாம் போகாதிங்கன்னாங்க,நான் போய் வாங்கிட்டு வரேன்னேன்,வேண்டாம் நான் போட மாட்டேன் நீங்க ரெண்டு பெரும் இங்கயே இருங்கன்னாங்க.அப்பாவிற்கு அக்கவுன்ட் செக்சனிளிருந்து அழைப்பு வந்தது.


                        நான் என் பர்சிலிருந்த வைரவர் அஷ்டகம்,துர்க்கை அஷ்டகம் எடுத்து படிக்க முயற்சித்தேன்,அந்நாள் முழு மனதாக படிக்க முடியல.வைபறேசனில் வைத்திருந்த போனும்,வந்து வந்து போகும் நர்ஸ்களின் மேலும்தான் மனம் சென்றது. அப்பத்தான் ஒன்றை உணர்ந்து வருந்தினேன்.என்னை அம்மா எப்படிலாம் பாத்து பாத்து வளர்த்தாங்க,என் திருமணத்திற்காக எவ்ளோ மனக் கஷ்டம் பட்டு என்னை திருமணம் செய்து கொடுத்தாங்க.எனக்கு நல்லா வாழ்க்கை அமைந்தும் என் கணவருக்காகவும் குழந்தைக்காகவும் ஒவ்வொன்றும் பாத்து பாத்து செய்துருக்கிறேன் அது போல ஒன்று கூட நான் அம்மாவிற்காக செய்யவில்லைனு யோசித்தேன் அம்மாவும் வீட்டு வேலைகளும்,மனக் கவலைகளும்,என் நினைவுகளுடனிருந்து தன் உடலை நிலையை அலச்சியப்படுத்திட்டாங்க, நானும் கவனிக்கல,அது மாதிரியான சந்தர்ப்பங்களும் அம்மா எனக்கு வைக்கல,என்னாலதான் அம்மா இப்படி ஆகிட்டாங்கனு நொந்து கொண்டேன்.தம்பி பாக்க வந்திருந்தான்,அவன் எதுவும் பேசல,அப்பா முப்பதாயிரம் பணம் கட்டிவிட்டு மேற்படி செலவிற்கு தம்பியிடம் பணம் எடுத்து வர சொன்னார்.மீண்டும் நாகை சென்றான்.அப்பா எனக்கு சாப்பாடு வாங்கி வந்து கொடுத்தார்,(முதல் நாள் மதியம் சாப்பிட்டது,பசி என்ற உணர்வே இல்லை).வேணாம்னு மறுத்த என்னை அந்த நிலையிலும் அம்மா சாப்பிடும்மா ,போம்மான்னாங்க கண்ணீர் பீறீக் கொண்டுதான் வந்தது.(இதை டைப் செய்யும்போதும் அதே மாதிரி என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை) அம்மா சொன்னதற்காக கண்ணீருடன் கலந்து உண்டேன்.அம்மாவிற்கு பால் கொடுத்து மாத்திரைகளை கொடுக்க சொன்னார்கள்.கொடுக்கும்போது மாஸ்க்கை கழற்றி விட்டு கொடுக்கப்படும்போது ரீடிங் குறைந்துகொண்டே போக எனக்கு கை காலெல்லாம் நடுங்க ஆரமித்துவிட்டது .அவசரமாக கொடுத்துவிட்டு மாஸ்க்கை போட்டு விட்டேன் .ரீடிங் நார்மலானது.ஆனால் அம்மா மாஸ்க்கின் வழியாக சுவாசித்தாலும் சாதரணமாகத்தான் படுத்திருந்தாங்க .எங்களுடன் நல்லா பேசினாங்க ,அந்த மெசின் சவுண்டும்,பீப் பீப் சவுண்டும் என் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டுதானிருக்கு.
                               
                                  காலை டூட்டி பாக்கும் டாக்டர் வந்தார் நான் என்ன சொன்னதற்கும் கேட்டதற்கும் எந்த பதிலும் அவரிடமிருந்து பெற முடியவில்லை,ஏழாயிரத்து சொச்சத்துக்கு மருந்து எழுதிக் கொடுத்தார்,நாகையில் எடுத்த ஸ்கேன் ரிப்போட்டை எடுத்துகிட்டு போய் பக்கத்து மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் பரீசீளிப்பு மருத்துவரிடம் ரிப்போர்ட் வாங்கிட்டு வர சொன்னார்.(இவ்வளவு பெரிய மருத்துவ மனையில் ஏன் அது இல்லைன்னு தெரியல ).மளிகை சாமான் போல அப்பா மருந்து பை நிறைய வாங்கி வந்தார்.(பாதியை நர்ஸ் செக்கிங் செய்துட்டு தருவோம்னு எடுத்து போனவர் திரும்ப அந்த மருந்துகள் வந்து சேர வில்லை). மீதி மருந்துகள் சலின் பாட்டில் வழியாகவும்,ஊசி மூலமும் செலுத்தப் பட்டன.ஒரு நர்சிடம் விசாரித்தேன்,இவ்ளோ மருந்தும் ஒரே நேரத்தில் போடுகிறேர்களே அம்மா உடம்புக்கு எதுவும் தொந்தரவு வந்துடாதுல்லன்னு கேட்டவுடன் அவர் இன்னும் நீங்க ரெண்டு செட் வாங்கனும் அதையும்தான் போடனும்.ஒரு செட் போட்டதற்கே இப்படி கேக்ரிங்கன்னாங்க.icu ரெண்ட் ஒரு பக்கமிருக்கட்டும்,ஒரு நாளைக்கு இருபத்திறேண்டாயிரத்துக்கு மருந்து வாங்குவது ஒரு பக்கமிருந்தாலும்,மருந்து போட்டே அம்மாவை கொன்னுடுவான்கப்பா நாம போய் டாக்டர்ட கேப்போம்ப்பா

                                 என்றேன் .அப்பா ஒத்துக்கல.என் தோழியிடமும் போனில் விபரம் சொல்லி கேட்டுவிட்டு அப்பாவை அழைத்துக்கொண்டு டாக்டரை பாத்தோம்.என்ன செயயனும்னு எங்களுக்கு தெரியும்னார்,இந்த மருந்துகளை நேற்று இரவிலிருந்து காலை பத்துமணி வரை போடாமல் ஏன் டிலே செயதீங்கன்னேன்(அவருக்கு கோபம் வராமல் வேறென்ன வரும்) .எங்களால் அதிக பணம் கட்டுவதும் சிரமமேன்றேன்,வெளியில் வந்த அப்பா ஏம்மா நீ வேற ஒன்னுகடக்க ஒன்னு சொல்லி வேதன படுத்தற நகைலாம் எதுக்கு இருக்கு.பாத்துக்க்கலாம்மான்னாங்க.

                                 அம்மாவிடம் வந்தவுடன் எங்கம்மா விட்டுட்டு போனன்னாங்க.போன் பேசிட்டு வந்தேன்னு சொன்னேன்.அப்பா அந்த பக்கத்து மருத்துவமனைக்கு போயிட்டு அந்த மருத்துவர் மதியம் மூன்று மணிக்குதான் வருவாராமேன்ர சோக பதிலுடன் வந்தார்.ஒரு வேலை வர வேண்டிய ரிப்போர்ட்டில் வேற ட்ரீட்மன்ட் கொடுக்கனும்னா அவர் நாளைக்கு வந்தார்ன்னா அதுவரை என் அம்மாவின் நிலை என்னாவது,மதியம் மூனு மணி வரை என் அம்மாவிற்கு நேரம் வேஸ்ட்தானே,எங்க ஊரில் வசதி இல்லைனுதானே இவ்ளோ தூரம் வந்தோம்,இங்க பாக்க முடியாது அழைச்சுட்டு போயடுங்கன்னு சொன்னாலாவது வேறெங்க முடியுமோ அங்கு போகலாமே,எங்களை வசதியாக வாழ வைத்த உருகி உருகி கவனித்த அம்மாவை இப்படி கவனிக்காமல் விட்டுட்டோமேனு வருந்தினேன்.
அம்மாவிற்கு பால் தவிர எதுவும் கொடுக்க முடியாமலிருக்கொமேனு நர்சிகளிடம் கேட்டேன்,கஞ்சி அல்லது காரமில்லாத சூப் கொடுக்கலாம்னாங்க.

                           அப்பா எங்களுக்கு மதிய சாப்பாடு வாங்கிட்டு விசாரித்துட்டு வந்தார்.பிறகு அப்பாவிடம் அம்மாவை பாத்துக்க சொல்லிட்டு நான் வெளியில் போனேன். இரவோடு இரவாக மருத்துவமனைக்கு வந்த நான் அப்பத்தான் தஞ்சாவூர் மண்ணையே மிதித்தேன் ஒன்றரை மணி இருக்கும். எதிரே ஒரு சூப்பர் மார்கெட், ஷாப்பிங் காம்ப்லக்ஸ்னு இருந்தது, அங்கு சென்ற நான் ஒரு ஐஸ் க்ரீம் கடையை பாத்தவுடன் அங்கே வாசலில் ஓரமாக உக்காந்து ஆத்திரம் தீர அழுதேன், எத்தனை நாள் என் அம்மா வாங்கித் தந்து எங்களை சாப்பிட வச்சு சந்ததோஷப்பட்டங்க.இப்போ அந்த அம்மாவிற்கு என்ன வாங்க வந்துருக்கேன்,எங்கம்மா அப்படி என்ன பாவம் செய்துட்டாங்கனு அழுத என்னை அங்கு வந்தவரும்,போனவரும்,சுற்றியுள்ளவரும் வித்தியாசமாக வேடிக்கை பாத்தனர்,என் மாமா ஒருவருக்கு போன் செய்து விபரம் சொன்னேன்,அழுதேன்,எலோரும் சொல்வது கவலைப்படாத,மனதை தேத்திக்க,கடவுள் மேல பாரத்த போடு,என்ன நடக்கனுமோ அதான் நடக்கும்.எனக்கு என் கையாலாகாத தனத்த நினைத்து எதோ நடமாடிக் கொண்டிருந்தேன்.

                            ஒரு ஹோட்டலில் விசாரித்து விஜடபில் சூப் வாங்கிவிட்டு அருகிலுள்ள ஷாப்பிங் காம்ப்லக்ஸ்னுல் டிஷு பேப்பர் வாங்க போனேன்,அங்கு வாசலில் டோக்கன் கொடுத்து அம்மாவிற்காக வாங்கப்பட்ட சூப் வெளி கவுண்டரில் வைக்கப்பட வேண்டியிருந்ததை நினைத்து வேதனைப்பட்டேன்,இப்படியே போயடலாமனு பாத்தேன்,பிறகு டிஷு பேப்பர் தேவைப்படும்னு உள்நுழைந்து தேடி எடுத்து பில் பே பண்ணிட்டு காம்ப்லக்சிளிருந்து ரோட் க்ராஸ் செய்து மருத்துவமனைக்கு அம்மாவிடமும் வந்துவிட்டேன். அப்பா என்ன வாங்கிட்டு வந்திருக்கன்னு கேட்டவுடன்தான் ஞாபகமே வந்தது.இத்தனை நாள் என்னை தன் உயிராய் வளர்த்த அம்மாவிற்கு உணவு கொடுக்க கூட நமக்கு தகுதி இல்லையோனு நினைத்து இருங்கப்பானு சொல்லிட்டு என்னால் எவ்ளோ விரைவா போக முடியுமோ போய் என் கையிலிருந்த டோக்கனை கொடுத்துவிட்டு சூப் பார்சலை வாங்கிட்டு ஓடி வந்தேன்,காய்களை எடுத்துவிட்டு பாதி கொடுத்தேன்,போதுனுட்டாங்க. மாத்திரை கொடுத்தேன்,மேலுமொரு இடி என்னவென்றால் நான் போன பிறகு ஆக்சிஜன் காலியாகி விட்டாதால் அம்மாவிற்கு சிரமம் ஏற்பட,பிறகு மாற்றியிருக்கிறார்கள்.(அதற்கு பிறகு அந்த கருவி சரியாக இயங்குச்சானு தெரியல) அம்ம்ம நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு கெஞ்சாத குறையா சொன்னாங்க,பிறகு பேருக்கு சாப்பிட்டு விட்டு முக்காவாசி சாப்பாட்டை குப்பத் தொட்டியில் போட்டோம்.

                              அப்பா மூனு மணிக்கு வருவதாக சொன்ன மருத்துவரை பாக்க பக்கத்து மருத்துவமனைக்கு ரெண்டேகாலிருக்கும் சென்றார்.அப்பாவின் நண்பர்,தம்பியின் நண்பர்கள், தாத்தா வந்தாங்க.தாத்தாவிடம் அம்மா (என் அம்மாச்சி)வல்லயான்னு கேட்டாங்க,இவ்ளோதூரம் எப்படிம்மா வருவாங்க வீட்டுக்கு போய் பாத்துக்கலாம்னேன்.சற்று நேரத்திலெல்லாம் ரீடிங் அறுபது எழுபதுக்கு போனது,எனக்கு பயமா இருந்தது,நான் மட்டும்தான் உடனிருந்தேன்,அம்மாகிட்ட பேசிப் பார்த்தேன்,நல்லா பேசுனாங்க,இரும்மா நர்சை அழைச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு போய் கூப்பிட்டவுடன் வந்தவர் டாக்டர்தான் இந்த மெசின ஆப்பிரெட் பன்வார்,அவர் வரட்டும்னு கூலாக சொல்லிவிட்டு தன்னுடன் வந்த மற்றொரு நர்சிடம் வீட்டுக் கதைகளை பேசிக் கொண்டு சலின் பாட்டிலை அட்ஜஸ்ட் செய்தார் .எனக்கு அவர்கள் மீது கடுப்புதான் வந்தது.டாக்டர கூப்பிட்டு வாங்கலேன்னேன்.நர்ஸ் வெளியே போனாங்க.நான் அப்பாவுக்கு போன் செய்தேன்.அந்த டாக்டர் இன்னும் வல்லம்மா,அம்மா எப்படி இருக்குன்னு விசாரித்தார்,பரவாயில்லை நீங்க முடிந்த வரை சீக்கிரம் வாங்கன்னு சொல்லி வைத்தேன்.இங்கு அம்மா உக்கரனுங்கராங்க ,பாத்து நிமிஷம் இருக்காது படுக்கனுங்கராங்க,மாத்தி மாத்தி சொல்றாங்க.பிறகு ரொம்ப நேரம் உக்காந்திருந்தாங்க,என்னிடம் தன் சேமிப்புகள் பற்றி சொன்னாங்க.அரை மணி நேரத்துக்குமேலா எந்த நர்ஸ் டாக்டர் யாரும் வரல,அம்மாவை விட்டுட்டு மீண்டும் அருகிலிருந்த நர்சை கூப்பிட்டேன்,வந்து பாத்திட்டு போனவர் ஒரு இளைங்கருடன் வந்தார்.அவர் டாக்டராம்.என் அம்மா காதுபடவே அவங்க லங்ஸ் மோசமாக்கிட்டுன்னவரை அம்மா பயந்துடுவாங்கலேனு அந்த பக்கம் வரேன் ப்ளீஸ் மெதுவா சொல்லுங்கன்னேன் ,அவர் எதையும் பொருட்படுத்தவில்லை.நீங்க எதுவும் எசபெக்ட் பன்னாதிங்கனு சொல்லிட்டு போய்ட்டார்.

                         அம்மாவுக்கு பயமோ என்னமோ இன்னமும் ரீடிங் குறைந்தது.நான் அழுதால் அம்மா வருத்தப் படுவாங்கனு கல்லாக இருந்தேன் என் தம்பியின் நண்பர்களிடம் விபரம் கூறி அப்பாவை நேராக போய் அழைத்து வர சொன்னேன்.அவர்களும் அப்படியே செய்து என் அப்பா வந்துவிட்டார் மணி ஐந்தாகியும் அப்பா எந்த மருத்துவரையும் பாக்க முடியலாம்.அப்பா வந்தவுடன் நான் வெளியில் போய் என் கணவரிடம் விபரம் சொல்லி அழுதேன்.அவரும் வ.இந்தியாவிலிருந்து புறப்பட தயாரானார்.ஐந்து மணிக்கு மேல் நாங்க பட்ட பாடு யாருக்கும் வரக் கூடாது,இங்கு டூட்டியில் உள்ள டாக்டர் வந்து கண்டிசன் மோசமாயிட்டு,இனிமே ட்யுப் மெத்தட் தான் அதுக்கு தனியா ஒரு நாளைக்கு பத்தாயிரம் கட்ட நீங்க ரெடின்ன நாங்க ட்ரீட்மென்ட் செய்ய தயாராகுறோம்னார்.என் அப்பா அப்பாவியாக அப்படி செய்தால் பிழைத்திடுவாங்கலான்னாங்க.இல்லை நம்ம திருப்திக்குதான்னு சொல்லிட்டு போய்ட்டார்.அம்மா எல்லாவற்றையும் நல்லா கேட்டாங்க,அப்பா டாக்டர் எல்லோரும் வெளியில் போயிட்டாங்க,அம்மா எவ்ளோ பயந்துருப்பாங்க,வேதனை பட்டிருப்பாங்க, அம்மாவிடம் அப்பாவை கூப்பிடவாம்மனு கேட்டதற்கு அவங்களுக்கு எங்கம்மா நேரமிருக்குன்னாங்க,என் கணவரும் உன்ன பாக்க வராரும்மன்னேன்,நீ ஏம்மா அவர தொந்தரவு பண்ற,சும்மாவே இருக்க மாட்டியான்னாங்க ,சற்று நேரத்தில் அம்மா மாஸ்க்கை கழற்றி விடுங்க,கழற்றி விடுங்கன்னு சொன்ன மாத்திரம் அதிகமாக வேர்த்துக் கொட்டியது,அப்போ அப்பாவும் உள்ளே வந்தார்,அம்மா குளுருது ஏசிய நிறுத்துங்கனு சத்தம்போட்டாங்க,நர்ஸ்களிடம் சொன்னால் டாக்டர் திட்டுவாங்க நிறுத்த மாட்டோம்னுட்டாங்க,அப்பா பக்கத்திலிருந்த ஏசியின் சுவிச்சை நிறுத்தினார்.அப்பா ஒன்னுமில்ல மணி பயப்படாத மணி னு குரலும் உடம்பும் நடுங்க,நடுங்க சொன்னார்,நர்ஸ் திட்டிகிட்டே சுவிச்சை போட்டு ரிமோட்டில் கண்ட்ரோல் செய்தார்,அப்பா என்னிடம் என்னம்மா செய்வோம்னு கேட்டாங்க,அந்த செலவையும் பண்ணிடுங்கப்பான்னேன்,அப்பா வெளியில் போய்ட்டாங்க,நர்ஸ் துணையுடன் உக்காந்திருந்த அம்மாவை விட்டுட்டு வெளியில் போய் அப்பாவை பார்த்தேன்,வீட்டுக்கு அழச்சுட்டு போயடுவோம்மா காசப்பத்தி இல்லம்மா அந்த கொடுமையெல்லாம் அம்மாவுக்கு வேணாம்மன்னாங்க ,எனக்கும் ஒன்னும் சொல்ல முடியல,உள்ளே வந்து உக்காந்திருந்த அம்மாவை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டு நானும் உக்காந்திருந்தேன், போன் வைப்ரேட் ஆனவுடன் போகாத இங்கயே இருன்னு கை சாடை காமித்தாங்க,அம்மாவிற்கு மூக்கு சளி இழுப்பது போல கற் கரனு சத்தம் வந்தது.படுத்துக்கிறியாம்மான்னு கேட்டேன்,சரின்னு தலையாட்டினாங்க,படுத்தவங்களையும் என் கையிலே தலை வைத்தவாறு நானும் லேசாக பிடித்துக்கொண்டு அம்மா நீ என்னோட தாம்மா இருப்ப,நாமெல்லாம் சந்தோஷமா இருப்போம்மா,நாங்க சந்தோஷமா இருப்பத நீ பாக்குவம்மனு மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தேன்.சற்று நேரம் கழித்து அம்மா கை கால்களை அசைத்தார்.எழுந்து அம்மா முகத்தை பாத்தா போது கண்கள் குழந்தை தூங்க போவது போல மயங்கி நின்றது.பக்கத்திலிருந்த நர்ஸ் கை விரலில் மாட்டியிருந்த நாபை எடுத்து கால் விரலில் மாட்டிவிட்டு அம்மாவின் கண்டகாலை பிடித்து பாத்தவர் நோ மோர்னு சொல்லிவிட்டார்.அம்மா என் கையிலே உயிர் விட்டது கூட தெரியாமல் வேடிக்கை பாத்த எனக்கு (தண்டனை முடிந்து விட்டதா,இன்னுமிருக்கானு தெரியல) ஒன்னுமே புரியல,எல்லாம் முடிந்து விட்டது என்னை நானே சுதாரித்துக் கொண்டு கதறினேன்,நர்ஸ் சத்தம் போடாதிங்கனு சொல்லிட்டு போய்ட்டார்,என்னை தன் உயிராய் கருதிய அம்மாவின் கண்களை நானே என் கைகளால் மூடிவிட்டேன் ,அம்மாவின் நெஞ்சில் மூச்சு வரும்மொன்னு அழுத்தி அழுத்தி பாத்தேன் லேசாக முதலுதவிக்கு அடிப்பது போல எல்லாம் முடிந்த பின் நப்பாசையில் செய்தேன்.உள்ளே வந்த தம்பியின் நண்பர் அப்பிடிலாம் செயாதிங்கக்கன்னு சொன்னார்,இநத வைத்துலதானம்மா பிறந்தேன்,என்னாலதாம்மா உனக்கு கஷ்டம்னு, அம்மா வயற்றில் படுத்து அழுதேன் (என் தோழி ஒருவரின் கால் வந்து கொண்டே இருந்தது) .வெளியில் நின்ற எல்லோரும் உள்ளே செய்தியறிந்து வந்தாங்க,வார்ட் பாயும் வந்தார்.அண்ணே எங்கம்மா நல்லாகிடுவாங்கன்னு சொன்னீங்களே எங்கம்மா எப்படி இருக்காங்கனு பாருங்கன்னேனு சொன்னவேகத்தில் அவர் கண்களிலிருந்தும் தண்ணீர் வந்தது, எல்லோரையும் வெளியில் போக சொன்னாங்க,எங்கம்மாவ போஸ்ட்மாடம் செய்வீங்கலானு கேட்டேன்,இல்லம்மா போம்மான்னு துரத்தினாங்க,அப்பா பொங்கி வெடித்தவராய் என்னை பிடித்து அலுத்து இழுத்துக் கொண்டு வாசலில் போய்தான் நிறுத்தினார்.யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது,எதுவாயிருந்தாலும் நல்ல டாக்டர பாருங்க,எங்கம்மா மீதி சூப்பை கூட குடிக்காம போயிட்டாங்களே,எங்கம்மாவுக்கு என்ன வியாதின்னு இதுவரை யாரும் சொல்லல்ல,இங்க வராதிங்கனு எனக்கு தோனுவதேல்லாம் சொல்லி கத்தினேன்,மருத்துவமனை வாசலில்.நாகையிலிருந்து தன் முயற்சியுடன் ஏறி வந்த அம்மாவை வந்த நேரம் கூட வல்ல,சடலமாக  ச்ற்றக்சரில் வச்சு அம்புலன்சில் வச்சாங்க,நான் ஓடிப் போய் அம்மாவின் தலையை என் மடியில் வைத்துக் கொண்டேன்.என் தம்பி வைத்தியம் பாக்க எடுத்து வந்த பணத்திற்கு கூட வேலை  இல்லாமல் போய்விட்டது.மீண்டும் நாகைக்கு என் அம்மாவை சடலமாக ஏற்றிப் போனதற்கு பிறகு நடந்த கொடுமைகள் வேண்டாம்.  

.அம்மாவின் தன் சுவாச நாள்

ஏழாம் நாள் (ஜூன் 27 ) விடியற் காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு விழித்து கதவை திறந்தேன் என் தாத்தா வந்திருந்தார் .வந்தவர் கட்டிடமெல்லாம் இடிந்து விழுவது போல கனவு கண்டேன்,அதாம்மா பயந்தது போய் வந்தேன்னு அழுதார்,என் பாட்டி (அப்பாவை பெற்றவர்) மூன்று வருடங்களாக அவதிப்பட்டு இறந்து ஒன்பது மாதங்களாகிறது.அவருடைய இருத் சடங்கில் மருமகளான என் அம்மா எதோ எரு வைக்கும் சாங்கியம் செய்தபோது சுவற்றில் ஒட்டாமல் கீழே விழுந்து விட்டதாம்.அது அசுபம் என்று சொல்லப்பட்டது.என் அம்மாவிற்கு அந்த பயம் வந்துவிட்டது.மேலும் நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலுக்கு முடி கயிறு வாங்க பூசாரி வர சொல்லியிருந்த நாளும் அன்றுதான்.அன்று அம்மா முகத்தில் குழப்பம் கலந்த பயம் இருந்தது.வீட்டிலிருந்து கஞ்சி எடுத் வரவிருந்த அப்பாவை வேண்டாம்னு சொல்லிவிட்டு என்னிடம் பக்கத்திலிருக்கும் உணவகத்தில் தோசை வாங்கிட்டு வர சொன்னாங்க அம்மா .இத்தனை நாளுக்கு பிறகு அம்மா தானாக விரும்பி கேக்ராங்கனு எனக்கு பிடித்த பேப்பர் ரோஸ்ட் வாங்கி வந்தேன்.கால் பகுதி சாப்பிட்ட அம்மா இனி போதும்னுட்டாங்க,சரி இது சாப்பிட்டதே பெரிய விசியம்னு கட்டாயபடுத்தல.அப்பா எனக்கு சாப்பாடு வீட்டிலேர்ந்து எடுத்துட்டு வந்ததை சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு போய்ட்டுவறேம்மானு சொன்னேன். என் உடல் நிலை சரியில்லாமல் போனபோது அம்மா தன் ஆயுள் வரை வருடத்திற்கு ஒரு முறை (என் நலத்திற்காக )நெ.க.மாரியம்மனுக்கு அங்கப்ப்ரதட்ச்சனம் செய்வதாக பிராத்தனை செய்த்கொண்டதால் வருட வருடம் செய்வாங்க.இந்த வருடம் பாட்டி இறந்து விட்டதால் செய்யவில்லைன்னு சொன்னாங்க.நான் என் சொந்த காரணத்திற்காக நானும் அம்மா மாதிரியே வேண்டி கொண்டு வருடம் ஒரு முறை அங்கப்ப்ரதச்சனம் செய்வேன்.எனவே என் வேண்டுதலை அன்றே செய்துவிடுகிறேன்னு அம்மாவிடம் சொன்னபோது அதெல்லாம் சுத்த பத்தமா இருந்து செய்யனும் ,நீ மருத்துவமனியில் இருக்க அப்படி இப்படின்னாங்க.


                                     மேலும் நான் இனி இருந்து என்ன செய்யபோறேன்,என்னால எல்லோர்க்கும் கஷ்டம் ஏதாவது ஊசிய போட்டு கொன்னுடுங்கன்னாங்க.எனக்கு உண்மையில் கோபம் கலந்த வேதனைதான் இருந்தது.நாங்கலாமிருந்து என்ன செய்யபோறோம் நீ ஏம்மா இப்பிடிலாம் பேசுற உனக்கு ஒன்னுமில்லம்மானு சொல்லி,அப்பாவிடமும் சொல்லிவிட்டு குழந்தையுடன் கோவிலுக்கு சென்றேன்.அம்மனுக்கு பால் ,மாலை,வாசலில் விற்ற பெண்ணுருவ மண் பொம்மை,சில்வர் தகட்டாலான பெண் உருவம் நெய் விளக்கு ,மூன்று பெண்களுக்கு சுமங்கலி தான செட் இத்தனையும் வாங்கிக்கொண்டு கோவிலிலே தலை குளித்துவிட்டு குழந்தையயை என் பின்னாலே வர செய்து எனக்கான அங்கப்ப்ரதச்சன வேண்டுதலை நிறைவேத்திவிட்டு, வாங்கி வந்த பொருட்களை அம்மனுக்கு செலுத்திவிட்டு,சுமங்கலி தானம் செய்து விட்டு (எல்லாம் என் அம்மாவை அனுப்பத்தான் செய்தேன் போல) முடி கயிறு தருவதாக சொன்ன பூசாரியிடம் வாங்கிக்கொண்டு,என் மேல் குறையிருந்தால் எனக்கு மட்டும் தண்டனை கொடு அம்மாவை நால்லபடியாக காப்பாற்று என சொல்லி கிளம்பிய எனக்கு அம்மா இறந்து போன பாட்டியை பற்றி சொன்ன நினைவு வந்ததால் ஏதாவதி வயசான பாட்டிக்கு புடவை ரவிக்கை வாங்கி கொடுத்து நம்ம பாட்டியிடம் அம்மாவை எந்த குறையில்லாமல் காப்பற்றுனு வேண்டிக்குவோம்னு மனதில் பட்டது.அன்று ஞாயிற்றுக் கிழமையால் நாகை கடைத்தெரு பரபரப்பு இல்லாமல் பல கடைகள் மூடியிருக்க ஒரு திறந்திருந்த கடையில் காட்டன் புடவை ப்ளவுஸ் வாங்கிக்கொண்டு பக்கத்திலிருந்த மற்றொரு கோவிலுக்கு சென்றேன்.தெய்வாதீனமாக உள் நுழைந்தவுடன் முதலில் தெரிந்தவர் வயதான பாட்டி ஒருவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.அவசரமாக சாமி தரிசனம் செய்துவிட்டு அந்த பாட்டியிடம் புடவையை என பாட்டியிடம் கொடுப்பதாக நினைத்து கொடுத்து,அம்மாவிற்காக பிரார்த்தனை செய்து கொண்டு அந்த பாட்டியின் முகத்தை பார்த்துக்கொண்டே கிளம்பினேன் .அம்மாவிடம் சென்று கோவிலிலிருந்து கொண்டு வந்த பிரசாதம் ,கொஞ்சம் பால் கொடுத்துவிட்டு அந்த முடி கையிற்றை எங்கம்மா கட்டனு கேட்டவுடன் அம்மா தன் மாங்கல்யத்தில் கட்ட சொன்னாங்க,முதன் முதலாக அம்மாவின் மாங்கல்ய செய்னை தொட்டு முடி கையிற்றை கட்டி விட்டேன். பூசாரி கொடுத்த எலுமிச்சம்பழத்தை வெட்டி கொஞ்சம் சாறு கொடுக்க முயன்றபோது எலுமிச்சம்பழம் கை தவறியது இதுலாம் மூட நம்பிக்கை என்றாலும் மீண்டும் எடுத்து அம்மாவாயில் ரெண்டு சொட்டு விட்டு தலை மாட்டில் வைத்துவிட்டு,அப்பாவிடம் டாக்டர் வந்து பார்த்தாரான்னு விசாரித்தேன்,இன்று சண்டே என்பதால் லேட்டாதான் வருவாராம்னு சொன்னாங்க,அப்பாவும் என்னை வீட்டுக்கு போக சொன்னாங்க,சரி அம்மாவை பாத்துகங்க பாப்பாவை வீட்டில் விட்டுட்டு மதியம் வர்றேன்னு படுத்திருந்த அம்மாவை எழுப்ப வேணாம்னு அம்மாவிடம் சொல்லாமல் வீட்டுக்கு கிளம்பினேன்.


                                 தாத்தா பாட்டி சாப்பாடு கொண்டு போக,அம்மா நீ வந்தாதான் சாப்புடுவேன்னு சொல்றாங்க,நீ உடனே வான்னு அப்பா போன் செய்தாங்க.எனக்கு அம்மா மேல் கோபம்தான் வந்தது. என்னவோ எனக்கு புத்தி கெட்டுத்தான் போனது.வீட்டிலிருந்து லேட்டாதான் கிளம்பினேன். என்னவோ எனக்கு போகும்போது அழுகையை அடக்க முடியல .வழி நெடுக அழுதுகிட்டேதான் போனேன்.மருத்துவமனை போன பிறகுதான் விபரம் தெரிந்து அழுவதை தவிர அம்மாவிற்கு தைரியம் சொல்வதை தவிர என்னாலும் யாராலும் ஒன்னும் செய்ய முடியல.
நான் வீட்டிற்கு போனவுடன் நடந்திருந்தது என்னவென்றால் தாத்தா அம்மாச்சி வந்தவுடன் பேசிக்கொண்டிருந்த அம்மா அம்மாச்சியுடன் பாத்ரூம் போயிட்டு திரும்பி வந்தவுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.அப்பா டாக்டரை அழைத்து வந்து காமிக்க அவர் நர்சிடம் மூச்சுத் தினரளுக்கான ஊசி போட சொல்லியிருக்கார்,அந்த நர்ஸ் தூக்க ஊசியை போட்டிருக்காங்க.இதனால் அம்மாவின் நிலை மோசமாகி கண்களை விழித்து பார்க்க முடியாத நிலைக்கு போய்ட்டாங்க.பல்ஸ் குறைந்து விட்டது.அப்பா மீண்டும் டாக்டரிடம் போய் சொல்ல இப்பதான ஆச்தலின் ஊசி போட்டிருக்கோம் மெதுவாகத்தான் குணமாவங்கனு சொல்ல பக்கத்திலிருந்த நர்ஸ் தூக்க ஊசிக்கான எதோ ஒரு பேரை சொல்லியிருக்கு,டாக்டர் அப்பாவின் முன்னாடியே நர்சை திட்டி விட்டு அம்மாவை பார்க்க வந்துள்ளார்.வந்தவர் செக் செய்துட்டு அம்மாவை தஞ்சாவூர் ஹாஸ்பட்டளுக்கு அழைச்சுட்டு போக சொல்லிட்டாராம்.எங்க நாகையில் கிரிடிகல் கண்டிசனில் உள்ளவர்களை தஞ்சாவூர்க்கு அழைச்சிட்டு போக சொல்லிடுவாங்க(அந்த ஹாஸ்பட்டளிளிருந்து எங்கயோ போங்கனுடுவாங்க ).அப்படி போன கேசில் பத்துக்கு எட்டு பேர் பிணமாகத்தான் வருவாங்க,அம்மாவே எத்தனையோ பேர் மோசமான நிலையில் தஞ்சாவூர் போயிருக்காங்கன்னாலே திரும்ப வர மாட்டாங்கன்னு சொல்லியிருக்காங்க.அம்மாவிற்கு கண்ணை திறந்து பார்க்க முடியலையே தவிர நிதானமாதாநிருந்தாங்க. இந்த நிலையில் தான் அப்பா எனக்கு இன்ன விபரம்னு சொல்லாமல் உடனே வர சொல்லியிருக்காங்க.கூடவே அம்புலன்ஸ் மற்றும் பணத்திற்கும் ஏற்பாடு செய்திட்டுருந்த நிலையில் தான் நான் போகிருக்கேன். அப்பா மனமுடைந்து சொல்லியதை கேட்டு அம்மாவை ஓடி போய் பார்த்தேன் .இந்த உலகத்தில்தான் இருக்கிறேனா,என் கால் பூமியில் படுகிரதானு ஒன்னும் புரியல.அப்பாவின் நண்பர்களும்,அருகிலுள்ள சில உறவினர்களும்,என் வீட்டில் தங்கிக்கொள்ளுங்கலேன்று சொன்ன தோழியின் அம்மாவும் அருகிலிருந்தனர்.


                                    அந்த நிலையில் அப்பவோ வேறு யாருமோ டாக்டரிடம் சண்டைக்கு நிற்கவில்லை.அம்மாவிற்கு அப்போ மூச்சு திணறல் இல்லைனாலும்,கண்களை விழிக்க முடியலை,குரலை வைத்து விசாரிச்சு கிட்ட அழைத்து பேசினாங்க,நான் வாய் விட்டு அழுதால் அம்மா வருத்தபடுவாங்கனு குமரிக்கொண்டும்,வரும் போன் கால்களுக்கு வெளியில் சென்று அவசரமாக பதில் சொல்லிவிட்டு ஓடி வந்து அம்மவுடநிருந்தேன்.அம்மா என் சித்தியை அழைத்து நான் இனி இருக்கமாட்டேன் எல்லோரும் ஒற்றுமையா இருங்கன்னு என் பெண்ணை அனாதையாக்கிடாதிங்க,பாத்துக்னு சொன்ன போது எனக்கே மூச்சு நின்றுதான் போனது.என் தங்கையிடமும் அதையே சொன்னாங்க.என் தம்பியிடம் கெட்டிக்காரத்தனமா பிழைச்சுக்கொடனு சொல்லியிருக்காங்க.என்னிடம் அப்பா பாவம்மா,அப்பாவ பாத்துக்கன்னாங்க,ஏம்மா இப்படி சொல்ற உனக்கு ஒன்னுமில்லம்மா,மயக்கத்தில்தாம்மா உன் உடல் நிலை இப்படியிருக்குனு சொன்னேன். அப்பாவும் ஒன்னுல்ல மணி பயப்டாதனு அம்மா தலைய தடவினாங்க,அப்பாவின் உடம்பு நடுங்குவதையும்,அவங்களும் செய்வதறியாமல் தவிக்கிராங்கனும் புரிந்த்துது,


                              உடம்பு ரொம்ப வலிக்குதும்மானு சத்தமா சொன்னாங்க ,உடம்பெல்லாம் சில்லுனு ஆகிட்டு.அம்மா பிழைப்பாங்கனு நம்பிக்கையே போயிட்டு,மருத்துவ வட்டாரத்திற்கு தொடர்புடைய தோழி அன்று ஏற்பாடு செய்த ரேக்கமண்டேசன் கடிதத்தை விட்டு விட்டு இந்த மருத்துவமனைக்கு வந்து தப்பு செய்துட்டோமேனு ஓடி போய் அவருக்கு போன் செய்து எதாவது உதவும்படி(பத்து வருட நட்பில் முதன் முறையாக உதவி கேட்டேன்) கேட்டேன்.எனக்காக அவரும் மெனக்கிட்டு சில ஏற்பாடு செய்தார்.அதற்குள்ளும் அம்புலன்ஸ் வந்துவிட்டது.உடல் வலிக்காக ஊசி போட்டு அம்மாவை திருவாரூர் மருத்துவமனைக்கு போகிறோம்னு சொல்லி கிளப்பினோம்.(தஞ்சாவூர்னா அம்மா பயப்படுவாங்கனு )என் தாத்தா அம்மச்சியிடம் எல்லோருக்கும் நல்லதுதான செயதேம்ப்பா நான் எப்படி போறேன் பாருங்கன்னு சொல்லிகிட்டே கிளம்பிய அம்மா அம்புலன்ஸ்க்கு கூட கைத்தாங்கலாக நடந்து வந்தாங்க.ஆனால் அம்மாவின் பல்ஸ் குறைந்து கொண்டே வந்தது.சினிமா சீன போல அம்மாவை அம்புலன்சில் படுக்க வைப்பதற்குள் அங்கு பக்கத்திலிருந்த எதோ அம்மன் கோவிலில் விழானு வீதியில் தப்பு,வெடி சத்தமுடன் காவடி வருகிறது,நீண்ட கூட்டம் பாதி கலைந்த நிலையில் அம்மாவை அம்புலன்சில் ஏற்ற முயற்சித்தபோது அம்மாவே ஏற முயற்சித்தது கண்டு சந்தோஷப்பட்டேன்.ஏறியவர் முருகா முருகா நான் இந்த வண்டியிலா போகனும்னு சொன்னாங்க.நான், அம்மா,அப்பா,தங்கை,தங்கையின் கணவர் சென்றோம்(முதன் முதலாக அம்புலன்சில்) அப்பா அப்பானு என் தாத்தாவை பரிதாபமாக கூப்பிட்ட அம்மா எங்களிடம் நான் வண்டியில் ஏறியபோது தாத்தாவை பாக்கலன்னாங்க .அங்கதாம்மா நின்னாங்க நீ பேசாம வாம்மனு லேசாக கால்களை அமிக்கிவிட முயற்சித்தேன் .அம்மா கால் வலிக்குதுன்னு வேகமாக காலை உள்ளிழுத்துக் கொண்டாங்க. அம்புலன்ஸ் அலாரமுடன் ஒழி ரோட்டின் இரு புறமும் பாய்ந்து கொண்டு போவதை பாக்கும்போது எனக்கே பீதியாக இருந்தது.அம்மாவை மறுபடியும் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திடுவோம்மாப்பானு கேட்டபோது அப்பா பரிதவிப்புடன் என் கைகளை இருக்க பிடித்து தன் மடியில் ,பல வருடங்களுக்கு பிறகு அம்மாவின் இப்படியொரு நிலையில் அப்பாவின் தொழிலும், மடியிலும் படுத்து வந்ததை மறக்க முடியாது,கூடவே என் தோழியும் அவரது கணவரும் ரேக்கமன்தாசன் உதவிக்குண்டான பெயர்கள் இடங்களை போனில் சொல்லிக் கொண்டே வந்தாங்க.என் தோழி எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நான் உன் அக்கௌண்டில் பணம் போடுகிறேன்.அம்மாவிற்கு பூரண மருத்துவம் செய்யுங்களன சொன்னாங்க.(உறவினர்கள் கூட அப்படியொரு வார்த்தையை சொல்லவில்லை)நீண்ட நேரம் பயணிக்கவே அம்மா இன்னமுமா திருவாரூர் வருதுன்னு கேட்டாங்க,இன்னும் கொஞ்ச நேரத்தில் போயிடுவோம்னு சொல்லி தஞ்சாவூரின் பிரபல மருத்துவமனைக்கு செல்ல,ரேக்கமண்டேசன் பற்றி சொன்னதே எங்களுக்கு எதிரானது.அம்மாவிற்கு நுரையீரல் ப்ராப்ளமுனு சொல்லப்பட்டிருக்கு,அதற்கான டாக்டர் ஊரில் இல்லை(பொய் சொன்னார்கள்,டாக்டர் மருத்துவமனையில் தான் இருந்துருக்கிறார் ),பல்ஸ் கம்மியாக உள்ளது உடனே வேற மருத்துவமனைக்கு போங்கன்னு சொன்ன போது ஏண்டா நம்ம உயிர்லாம் இன்னுமிருக்குனு எல்லோரும் நினைத்தோம்.மீண்டும் தோழியிடம் போனில் விபரம் சொல்ல அவர் அருகிலுள்ள மற்றொரு பிரபலமான மருத்துவமனைக்கு வழிசொன்னார். வெளிக்காற்று பட்டதாளோ என்னவோ அம்மாவிற்கு பல்ஸ் குறைந்துட்டு,குறைந்துட்டுன்னு சொன்னாலும் அம்மா தெளிவாக பாத்தாங்க,பேசினாங்க.


                                   அடுத்த மருத்துவமனையில் சேர்த்த போது நைட் டுட்டியில் வந்து பார்த்த டாக்டர்(மது பான வாசனை)icuவில் அட்மிட் பன்னுவோம்,உயிரோட வந்தாலும் வராட்டாலும் பரவாயில்லைனா அட்மிசன் போடலாம் இல்லேன்னா அழைச்சுட்டு போயடுங்கனு சொன்னதை கேட்டு ஆடி போய்விட்டோம்.ஒத்துக்கொண்டோ அப்பா கை எழுத்திட்டு அம்மாவிற்கு மருத்துவம் தொடங்கப்பட்டது.என்னை பார்த்து பார்த்து வளர்த்த அன்பான கைகளில் ஒரு மாத காலமாக அத்தனை ஊசிக் குத்திய பொறிகள்(தழும்பு).வெளி வார்டில் வைத்து ப்ளட் டெஸ்ட் எடுத்தவுடன் icu வில் வைக்கப்பட்ட அம்மா என் தங்கையை அழைத்து (எங்க மாமா ஒருவர் ரெண்டு ஆண்டுகளுக்கு முன் கிட்னி பாதிப்பால் icu வில் வைத்தபின் இறந்தார் அதே ஜூன் மாதம்) அந்த மாமா மாதிரியே என்னையும் வச்சுடாங்கனு சொன்னாங்க.நீ பேசாம அமைதியா இரும்மானு சொன்னோம்.அப்பவோ உள்ளே வந்து அம்மாவை பாக்க வர மாட்டேனுட்டார்.நான் கட்டாய படுத்திய போது அந்த கொடுமைய என்னால பாக்க முடியாதும்மனு அழுதாங்க.அம்மாவிற்கு ஆக்சிஜன் வைக்கப்பட்டது.பொதுவாக icuவில் உடனிருப்போரை கூட தொடர்ந்து அனுமதிக்க மாட்டாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்,ஆனால் அங்கு யாரவது ஒருவர் கூடவே இருங்கன்னு சொன்னது பெரிய பாக்கியம்னு நினச்சு அம்மாவுடனிருந்தேன்.டாக்டரிடம் என்னால் முடிந்தளவு எனக்கு தோன்றிய சந்தேகமெல்லாம் கேட்டேன் அவரும் பொறுமையாக பதில் சொன்னார்.மேலும் மானிட்டரில் பல்ஸ் ரேட் 80,90 காமித்துகொண்டிருன்தது.100 அல்லது அதற்கு மேல் வந்தால் நார்மல்னு சொன்னார்.அந்த மாஸ்க்கை எடுத்துவிட்டு தண்ணீர்,பால் கொடுக்கலாம்னு சொன்னார். மேலும் நாங்க கொண்டு போன ஸ்கேன் ரிப்போர்ட்டில் உள்ள படி டிபி அட்டாக்லாம் கிடையாது ,லங்சில் பங்கஸ் படிந்த மாதிரி இருக்கு,பொழுது விடந்தவுடன் இந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் காமித்து டீட்டைலான ரிப்போட் வாங்கிட்டு வாங்க,நாங்க எல்லாம் செய்வோம்,பெசன்ட்க்கு உடல் தாங்கணும்னு சொன்னார்.நாங்க வேதனையில் பூமியில் உருண்டு பெரண்டு அழாத குறைதான்.நாங்கள் இப்படியிருக்க நைட் டுட்டி பாக்கும் நர்ஸ்கள் தூக்கத்தில் இருப்பதும்,நாம் ஏதாவது கேட்டால் சரியாக ரச்போன்ஸ் பன்னாமளிருப்பதும்,நம் காது பாட சொந்தக் கதைகளை பேசிக் கொண்டிருப்பதும் என்னை எரிச்சலுட்டியது




                                 எக்ஸ்ரே மெசின் உள்ளே கொண்டு வரப்பட்டு எக்ஸ்ரே எடுக்கும்போது தாலி செயினை கழற்ற சொன்னாங்க,எங்க உதவியுடன் கழற்றிய அம்மா மீண்டும் போட்டுக்க ஆசை பட்டாங்க ,அப்பாவே அணிவித்து விட்டால் இன்னும் சந்தோஷப்படுவாங்கனு அப்பாவ போட்டு விட சொன்னோம்.அப்பாவின் கைகளால் அம்மா சந்தோஷமா போட்டுகிட்டாங்க. நான் அம்மாவுடனே இருந்தேன் அம்மா விழித்த வண்ணமே இருந்தாங்க.அம்மா ரெஸ்ட் எடுக்கனும்மா.சற்று கண்ணா மூடி தூங்கும்மன்னு சொன்ன பொது,எனக்கு இங்கிருக்கவே பயமா இருக்கு எப்ப வெளி வரதுக்கு கூட்டிட்டு போவாங்கனு கேட்டாங்க,மத்தியானம் போயடலாம்மா,நீ எதையும் போட்டு குழப்பிக்கதானு அம்மா அருகிலிருந்த ஸ்டூலில் உக்காந்து அம்மாவின் கையருகில் தலை வைத்து படுத்த நான் அசதியோ என்னவோ தூங்கிவிட்டேன்,எதோ டிஸ்டபன்சாக விழித்த எனக்கு அம்மாவின் கை என் தலையை தடவி கொண்டிருப்பதை உணர்ந்து அம்மாவின் கையை பிடித்து அழுதேன்.அம்மா ஏண்டா அழறனு பரிதாபமா கேட்டாங்க,இடையில் வந்த நர்சிடம் அம்மா இது என்ன ஊர்னு கேட்க அவர் தஞ்சாவூர்னு சொல்ல அம்மாவிற்கு பயம் ஏறியது,பத்து ரீடிங்களவும் குறைந்தது ,இந்த ரீடின்களவு எந்தளவுக்கு உண்மை,சரின்னு தெரியாது.நானும் அவ்வபோது வந்த போன் கால்களை அட்டன்ட் செய்ய பேசுவதற்காக வெளியில் வந்து பேசிட்டு போனேன்.என் மன ஆறுதலுக்காக என் கணவர் மற்றும் சிலரிடம் அம்மாவின் நிலை பற்றியும் சொல்லி அழுது கொண்டிருந்தேன்.உள்ளே வந்தவுடன் ஏன் ஆச்சி விட்டுட்டுவிட்டுட்டு போற.நீ என்கூடவே இரும்மன்னங்க.சற்று நேரம் அம்மாவுடனிருந்தேன்.பிறகு அப்பா எங்கன்னு வெளியில் போய் பாத்துட்டு வரேன்னு அம்மாவிடம் சொல்லிட்டு வந்தேன்.வெளியில் வந்து அப்பாவை தேடி பாத்தா நான் அப்பாவின் நிலை கண்டு நொறுங்கி போனேன்,அப்பா தரையில் ஒரு ஓரமாய் வழிபோக்கர் போல கவிழ்ந்து படுத்திருந்தார் .அப்பாவை எழுப்பி பேசினேன்,அவரால் எதுவும் சொல்ல வார்த்தை வரல,முகமும் அவருடையதாகவே தெரியல,அப்பா என்னிடம் உன் கணவரை பிளைட் புக் செய்து கிளம்பு சொல்லுனார்,இல்லப்பா அம்மா நல்லாயிடுவாங்க.அம்மா நல்லானவுடன் அவருக்கு சொன்னால் போதும்னேன்,அப்பா எழுந்து போய்ட்டாங்க.அம்மாவை வந்து பாருங்கன்னு சொன்னதற்கு என்னக்கு உள்ள போனாலே உடம்பெல்லாம் நடுங்குதும்மா,நீயே கிட்ட இரும்மான்னங்க.