Thursday, August 18, 2011

மீண்டும் வருவாயா?

அம்மா நீ எங்கு இருக்கியோ,
எப்படி இருக்கியோ,
என்னுடன்தான் இருக்கியோ
தெரியவில்லை!
எங்களுடன் இருப்பதாக
நம்பிக்கை மேல் நம்பிக்கை
எனும்போது விரக்தியில்
உலாவுகிறேன்.
உன் உயிர் பிரிந்த நிமிடங்கள்
நினைவில் வந்து வந்து
என் சுவாசத்தை விழுங்குகிறது,
என்னையும் அப்பாவையும் தவிர
மற்றனைவருக்கும் உன் பிரிவு
செய்தியாகி,காற்றோடு கரைந்தாகிவிட்டது.
என் அன்னையாக வாழ்ந்ததும்
உனது அன்பும் எனக்கு மட்டுமே புரியும்.
உன் இழப்பில் புதைந்துவிட்ட
எனக்கு மட்டுமே உன் அருமை தெரியும்
என் சோகத்துக்கு மட்டும்  பிறர் மனதை
எதிர்பார்ப்பது  சரியில்லை,
நீ இறந்தபோது கிடைத்த ஆறுதல்களை
இன்றும் பிறரிடம் எதிர்பார்ப்பதும்
மற்றவர்களை சங்கடத்தில் தள்ளுவதாக
உணர்ந்துகொண்டேன்.உதட்டோர ஆறுதல்
வார்த்தைகள் கேட்டுவந்தேன்.
தினமும் நினைத்து ஏங்கும் எனக்கு
உன் நினைவு நாள் உன்னை
காப்பாற்ற முடியாமல்போன
கையாலாகாத நாளாகவே இருந்தது.
உன்னை தீயிலிட்ட அந்த கொடூர
மறுநாளை குறிப்பிட வார்த்தைகள்
தெரியவில்லை. தவச தினத்தன்று
உறைந்திருந்த என்னை அப்பாவின்
கண்ணீர் உருகவைத்தது.
பாட்டி இறந்தன்று அணிந்திருந்த
உடைகளை , முதல் தவசம் முடிந்தும்
கடலில் விட்டுவந்த அப்பாவிற்கு
நீ இறுதியாக அணிந்திருந்த
உடைகளை கடலில் போட
மனதோ,தைரியமோ இல்லை.
பார்க்க நீ இல்லையே என
வருந்தும் சம்பவங்கள் பல.
நல்லவேளை நீ இல்லையென
நினைக்கவைக்கும் சம்பவங்கள் சில.
உன் மரணத்திற்கு பிறகுதான்
எங்கு மரணச் செய்தி கேள்விப்பட்டாலும்
எந்த உயிரை தவிக்கவிட்டு,எந்த உயிர்
பிரிந்ததோயென வருந்துகிறேன்.
பெற்று வளர்த்து இதுவரை
அன்பும்,வாழ வழியும் காட்டியது
போதுமென அழைத்துச் சென்ற
காலனே!எந்த உயிரையாவது
பூமிக்கு அனுப்பும் வரம்
பெறுவாயெனில் என் அம்மாவை
எனக்கு மீண்டும் தந்துவிடு!!!
அம்மாவுடன் இனியொரு முறை
வாழவிடு அல்லது என் அம்மாவுடன்
வாழ்ந்த நாட்களை மீட்டுக்கொடு..../.