Tuesday, December 25, 2012

சொல்லாமலே



பக்கத்து வீட்டிற்கு சென்றாலும் 

விளையாடப் போனாலும் 

பள்ளிக்கு சென்றபோதும் 

தோழிகளுடன் சென்றபோதும் 

கல்லூரிக்கு சென்றபோதும் 

அம்மா போயிட்டு வரேன்னு 
சொல்லிட்டு போவேன்,

அவசரமாய் பஸ்ஸை  பிடிக்கச் சென்ற 
ஓரிரு முறை போயிட்டு வரேம்மான்னு 
சொல்லாமல் போனதில் மாலை 
வீடு திரும்பி உன் முகத்தை 
பார்க்கும்வரை மனம் உறுத்திய 
வலியை உன்னிடம் பகிர்ந்ததில்லை.

திருமணமாகி புகுந்த வீடு செல்லுகையில் 
போயிட்டு வரேன் என்ற வார்த்தையின் 
கொடூரம் உணர்ந்தேன்.

அதன்பிறகு ஒவ்வொரு முறையும் 
கணவருடன் வந்து செல்லுகையில் 
வாசற்படி எங்கிருக்குன்னு தெரியாமல் 
மறைக்கும் கண்ணீரை தொடைத்து,

அடைத்த தொண்டைக் குழியில் 
போயிட்டு வரேம்மா என்பதும் 
மூழ்கி  மூழ்கித்   திணறும்.

கண்ணீரை 
கட்டுக்குள் வைக்க இருவரும் 
போராடுவோம் ..

இதனாலா உன் மரணப் படுக்கைக்கு 
போயிட்டு வரேன்னு
சொல்லாமலே சென்றாய்.....
உன் மனம் 
எவ்வளவு 
வேதனைப்பட்டிருக்கும்......