தங்கையின் திருமணத்தை காரணமாகக் கொண்டு அம்மாவுடன் ஏப்ரல்,மே 19 ஆம் நாள் வரை மட்டுமே அம்மாவுடன் தங்கிவிட்டு மாமியாருடன் கிளம்பிய எனக்கு அந்த ஒன்றரை மாதமும் என் வாழ்வில் ஒரு பக்கம் சந்தோஷப் படுத்தினாலும் ஒரு பக்கம் புத்தி பேதலித்த நாட்கள்தான்.நான் வ.இந்திய சென்ற நாளிலிருந்து முதுகு,தலை,கழுத்து வலியென ஆரம்பித்த அம்மாவிற்கு நான்காம் நாள் முகம்,கால் வீக்கம் ஏற்படவே ஜெனரல் எம்பிபிஸ் டம் காமித்த போது எதோ தவறான மாத்திரை சாப்பிட்டுருக்காங்க போலனு சொல்லி அண்டிபயாடிக் கொடுத்திருக்காங்க.பிறகு அம்மாவிற்கு முழு ஆகாரம் சாப்பிட முடியவில்லை,மூன்றுவேளையும் கஞ்சிதான்.காய்ச்சல் அதிகமானவுடன் நாகையில் ஹாஸ்பட்டலில் சேர்க்கப்பட்ட அம்மாவிற்கு ஈசிஜி,டைபாய்டு,மஞ்சள் காமாலை,ப்ளட் டெஸ்ட் எடுத்ததில் எல்லாம் நார்மல் ப்ளேட் லட் கவுன்ட் மட்டும் குறைந்துள்ளதாகவும் ட்ரீட்மென்ட் கொடுத்தால் சரியாகிடும்னும்,மனக்கவலை இல்லாமல் இருக்க சொல்லியிருக்காங்க .வழக்கம் போல போனில் விசாரித்துக்கொண்டிருந்தேன்,பல் வலிக்காக அம்மா ரெண்டு டாக்டரிடம் காமித்தாங்க,பல் எடுத்தாங்க,அப்போ வலி நிவாரணி மாத்திரை அதிகம் எடுத்துகிட்டாங்க,அதனால இப்படியாகிவிட்டதோ தெரியல. யாரும் சீரியஸாக எடுத்துக்க தோனல,இப்போ எதோ உடல் நிலை சரியில்லை,பிறகு சரியாகிடும்னே அம்மா உட்பட எல்லோரும் நினைத்தோம்.தொலைக்காட்சியில் எத்தனை மருத்துவ நேர்காணல்களும்,அக்கம் பக்கத்தில் எத்தனை பேருக்கு,எத்தனை விதமான உடல் சீர் கேடுகள் வந்து பிழைத்ததையும் ,இறந்ததையும் பார்த்திருக்கிறோம்.ஆனாலும் எல்லாம் எங்கள் கண்களை மறைத்துதான் போனது.
ஒரு ஞாயிற்றுக் கிழமை அம்மாவை ஹாஸ்பட்டலில் சேர்த்திருக்காங்க,தொடர்ந்து நான்கு ஞாயிற்றுக் கிழமை (நான் செய்த பாவமோ,யார் வினையோ தெரியல)அம்மாவை ஹாஸ்பட்டலிலே வைக்கும் படியாகிவிட்டது.அங்கு போய் சலின் போட்டு மாத்திரை சாப்பிட்டவுடன் நல்லயிடுவாங்க.போனிலும் குரல் நன்றாக கேக்கும்.வீட்டுக்கு வந்தவுடன் உடல்நிலை மோசமாகி விடுவதுமாக இருந்த அம்மாவும் அக்கம் பக்கத்தினர் சிலரும் வீட்டுக்கு வந்தவுடன் ஏன் இப்படி ஆகிறது,அந்த கோவிலுக்கு போய் அத செய்,இந்த பூசாரிகிட்ட போய் திருநீர் வாங்குன்னு ஆளாளுக்கு சொன்னதேல்லாமும் ,எப்படியோ உடல் நலம் பெற்றால் சரின்னு செய்துருக்காங்க.அப்பாவும் ரொம்பவே மெனக்கட்டு அழுத்தும் போய்ட்டாங்க .அம்மாவிற்கு சாப்பாடு செல்லல,
இடைப்பட்ட நாட்களில் அம்மாவை இழக்க போகிறோம்னு தெரியாத பாவியாகிய எனக்கு ஹரித்வாரும்,ஹிமாச்சல பிரதேசும் போகும் படியான கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.அம்மாவிடம் சொன்னபோது அம்மாவிற்கு வருத்தம்தான்,ஆயினும் போய்விட்டுத்தான் வந்தேன்.மகனை பெற்ற என் மாமியார் மகனுடனிருக்க மகளை பெற்ற என் அம்மா உடல்நிலை சரியில்லாத போது கூட அருகில் இருக்க முடியவில்லைன்னு,அன்றுதான் முதன் முதலில் பெண்ணாக பிறந்ததற்காக வருத்தப்பட்டேன்,{அம்மாவை பார்க்க கணவர் உட்பட யாரும் தடை விதிக்கவில்லை,மகளை பெற்றால் தன் பெண் தன் கணவருடன் சந்தோஷமாக வாழ்வதை தூரத்திலிருந்து பார்த்து சந்தோஷப்படுவதுதான் அவர்கள் வாங்கிய வரம்.மகனை பெற்றவர்கள் எந்த சூழ்நிலையிலும் தான் பெற்ற பிள்ளையுடனே இருக்கலாம்.கேட்போரோ,பழிப்போரோ ,அனுமதி வழங்காதவரோ யாருமில்லை.இத இவர்கள் வாங்கிய வரம்.}அம்மாவிற்கு இருபது நாளாகியும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை,சாப்பிடவும் முடியவில்லை நாகையின் முக்கிய மருதுவர்களிடமெல்லாம் பரிசீலித்தும் நார்மல்,நார்மல்என்று சொல்ல,தலை குளித்து நிறைய நாளாகிவிட்ட அம்மாவிற்கு தங்கை தலை சுத்தம் செய்து கொடுத்தாள் என்று கேள்விப்பட்டவுடந்தான் எனக்கு அதிக மன வேதனையானது,பயமும் வந்தது,அம்மாவிற்கு அடுத்தவர் உதவி செய்யுமளவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டதானு வேதனைப்பட்டு அம்மாவிடம் நான் ஊருக்கு வருகிறேன்னு சொன்னபோது 'இங்க எல்லோரும் என்னை நல்லாத்தான் பாத்துக்கிறாங்க,நீ இப்பதான் போன,குழந்தைய வச்சுகிட்டு மறுபடியும் அங்குமிங்கும் அலையாத நான் பாத்துகிறேனுட்டாங்க'.
தலையில் தண்ணி பட்டவுடன் பிடித்த சளிதான் அம்மாவை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது,லேசான மூச்சு திணறலும் வர காய்ச்சலினால் அனத்துகிறார் என்றே எல்லோரும் பெரிதாக எடுத்துக்கல,இத்தனை நிகழ்வுக்கு பிறகும் அம்மா என்னை வந்து பாருன்னு சொல்லாமல்,பட்டும் படாமல் பேசியதைக் கொண்டு அம்மாவை நேரில் சென்று பார்க்காமல் இருந்தால் சரியிருக்காதுன்னு ஊருக்கு போக ஏற்பாடு செய்தோம்,என் தங்கையும் முடிந்தவரை சீக்கிரம் வா என்றவுடன் தலை சுற்றி கிழே விழாத குறைதான்,கணவரோ 'அம்மாவிற்கு ஒன்னும் ஆகாது,நீ வர்றன்னு தெரிந்தாலே சரியாகிடுவாங்க,வரும்போது அம்மாவை அழைச்சுட்டு வந்து இங்க ட்ரீட்மென்ட் செய்து பார்ப்போம்னு'தைரியமூட்டினார். ரெண்டு நாட்களில் அம்மாவிற்கு போனில் கூட பேச முடியல,போனையும் நிறுத்திட்டாங்க.நான் குழந்தையுடன் மாமியார் துணையுடன் கிளமினேன்.அம்மாவை எப்படியாவது குணப்படுத்தி வரும்போது அம்மாவையும் கூடவே அழைச்சிட்டு வரணும்னு பயணித்தேன்.நான் இங்கிருந்து புறப்பட்டபோது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் வந்து மீண்டும் அட்மிட் செய்தபோது இனி இங்கு ட்ரிட்மென்ட் செய்ய முடியாது தஞ்சாவூர் அழைச்சுட்டு போங்கனு சொல்லியிருக்காங்க.
அப்படி என்னப்பா வியாதி அம்மவிற்குனு கேட்டால் 'சளி காச்சல்தாம்மா இத்தனை நாள் கொடுத்த மருந்துகளில் சரிவல்லை அதனால் தஞ்சாவூருக்கு போக சொல்றார்ம்மா,நீ வந்தவுடன் போய்க்கலாம்மா,நீ பயப்படாம வாம்மான்னு ' போபாலை கடந்து வந்து கொண்டிருக்கும்போது அப்பா சொல்றாங்க.எனக்கோ எதிர் மறையான எண்ணங்கள் தான் அதிகம் தோன்றுகிறது.உலகமே ஸ்தம்பித்து நிர்க்கிரதேன்ரதை அப்போ உணர்ந்தேன்.மறுநாள் காலை ஏழரை மணிக்கு ட்ரையின் சென்னை சென்ட்ரலுக்கு வந்தது.எட்டு மணிக்கெல்லாம் அம்மா போன் பண்றாங்க.அம்மா காலிங்னு வந்த மொபைலை பாத்தவுடன் சந்தோஷமாக அட்டென்ட் செய்தேன்,அம்மா கஷ்டப்பட்டு பேசுவது புரிந்தது.(அந்த அழைப்புதான் அம்மாவிடமிருந்து வந்த கடைசி போன் அழைப்பு.)அந்த நிலையிலும் 'ஆச்சி பாப்பாவ பாத்து அழைச்சுட்டு வா,சாப்பிட்டுவிட்டு பொறுமையா வான்னாங்க'சரிம்மா உனக்கு உடல் நிலை எப்படி இருக்கும்மான்னு கேட்ட போது நான் நால்லாதாநிருக்கே நீ பத்திரமா வான்னு கடைசிவரை அவங்க அக்கறை காட்டுவதில் தவறவில்லை..
ஜூன் 21ஆம் தேதி இரவு வீட்டிற்கு சென்றேன்.நான் எப்போ எங்கிருந்து வந்தாலும்.என் வருகையை எதிர்பார்த்து வாசல்படியிலே காத்திருக்கும் அம்மா முதன் முறையாக வாசலில் காணவில்லை. மே 19 ஆம் தேதி எனக்கு சாப்பாடு செய்து,சகல பேகிங்களும் செய்து பஸ் ஏத்தி விட்டு போன அம்மா படுத்திருந்ததை பார்த்தவுடன் என் கண்களால் நம்ப முடியவில்லை,ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காத அம்மா நான் வருவதரிந்தும் படுத்திருக்காங்கன்னா எவ்ளோ உடல் நிலை மோசமாகிவிட்டது!வாம்மான்னு தானாக எழுந்து உக்கார முயர்ச்சித்தாங்க,என்னால் அழுகையை அடக்கமுடியவில்லை.நான் வருத்தபட்டால் அம்மா ரொம்ப கஷ்டப்படுவாங்கனு அம்மாவிற்கு முன் அழுவதை கட்டுபடுத்தினேன்.என் குழந்தையுடன் பேசினாங்க,கஞ்சி ,மருந்து சாப்பிட முடியலம்மா,பாத்தாலே பயமா இருக்கு,அப்பா கட்டாயமா கொடுத்தா வாமிட் செய்துடுறேனு குழந்தை போல பேசினாங்க,மூச்சு விடுதலும் வித்யாசமா இருந்ததைக்கொண்டு விசாரித்தபோது ஜுரம் வருதுல்ல அதான்னாங்க.அப்பாவிடம் எல்லா ரிப்போர்ட்டும் வாங்கி பார்த்தபோது எல்லாம் நார்மல்,ஆனால் ரெண்டு நாளுக்கு முன் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே வில் சளி இருப்பதாகவும்,{டிபி யாக இருக்கலாம்னு சந்தேகப்படுவதால் தஞ்சாவூருக்கு போக சொல்லியிருக்கிறார்கள்.நாகையில் போதுமான ஸ்பசளிஸ்ட்டுகள் இருக்க இங்க முடியாது தஞ்சாவூருக்கு போங்கனு டாக்டர்ஸ் சொல்லிட்டாலே அவங்க நிலை மோசம்னு அம்மா உட்பட எல்லோருக்கும் தெரியும்},டிபி னு சந்தேகம்னா சளி டெஸ்ட் பன்னலயாப்பன்னா,இல்லம்மா நிறைய நாலா ஜுரம் விட்டு விட்டு வருது கண்ட்ரோல் ஆகல.அதான் அங்க போசொல்றாங்கன்றாங்க.அம்மாவை விட்டுட்டு போய் ஒரு மாதம் கூட ஆகல அதற்குள் அம்மா இப்படியாகிட்டான்களே!ஊருக்கு போய் தப்பு செய்துட்டோம், அம்மாவுடனே இருந்திருக்கலாம்னு வருத்தப்பட்டேன்.
{என் ஊரிலேர்ந்து ஏழு கிமீ தொலைவில் [தான் எல்லா மருத்துவமனையும் உள்ளது] நாகை மாவட்ட அரசு மருத்துவமனை உள்ளது,டிபி,எய்ட்ஸ்,தொழுநோய்களை கண்டறியும் அறிகுறிகளும்,ட்ரீட்மேன்ட்களும் உள்ளதாக சொல்லப்பட்டாலும் கேள்விப்பட்டிருந்தாலும் அங்கு போகவும் யாருக்கும் தோனல,ஏனெனில் அம்மாவை முதன் முதலாக உள்ளூர் பொது மருத்துவரிடம் காமித்த பிறகு ஒரு இரவில் உடல்நிலை மோசமானபோது அவசரத்திற்காக அரசு மருத்துவ மனையில் சேர்த்தபோது,எவ்வளவு அலட்ச்சியபடுத்தனுமோ படுத்தினாங்கலாம் ,பிளt ,சுகர்,யூரின் டெஸ்ட் எடுக்க கூட ஆளில்லாமல்,பொழுது விடிந்து பத்துமணிக்கு எடுத்த பிறகும் நோயாளியின் அவசரம் புரியாமல் டெஸ்ட் ரிப்போர்ட் நாளைக்குதான் தருவோம்,அவசரம்ன பிரைவட்க்கு அழைச்சுட்டு போங்கன்னு பதில் வந்தபோது,அரசு மருத்துவ மனை பற்றி தெரிந்தும் அவசரத்திற்கு வந்தது தப்புதான்னு பிரைவேட்டுக்கு சென்றுள்ளனர்.}
{ இரண்டாம் நாள் (ஜூன் 22 ) } சாப்பாடு ஏன் சாப்பிட முடியல,ஹாச்ப்பட்டலில் தெளிவாக இருக்கிறாங்க வீட்டுக்கு வந்தவுடன் சரியில்லாமல் போறாங்கன்ன வயிற்றில் ஏதாவது செருகல் இருக்கலாம், {நாகையில் குடலில் செருகல் எடுக்குமிடம் ஒன்று உள்ளது,நாடி பிடித்து பார்த்து,குடலில் எதாவது அடைப்பு,செய் வினை வைத்து எதிராளிக்கு உணவில் ஏதாவது கலந்து கொடுத்துவிட்டால் அதை எடுப்பது,குழந்தை ஏதாவது விழுங்கிவிட்டால் எடுப்பது, பல காலமாக நடைமுறையில் உள்ளது,இது எந்தளவுக்கு உண்மைன்னு தெரியல,ஆனால் அங்கு எப்போதும் கூட்டமிருக்கும் } அங்க அம்மாவை அழச்சுட்டு போய் பார்க்க சொன்னங்க,எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் அப்பா மற்றும் சுற்றத்தாரின் பேச்சை தட்ட முடியல.செருகலேடுக்குமிடத்தில் அம்மாவை நாடி பிடித்து பார்த்தவர் வயிற்றில் பிரச்சனை இல்லை,ஆங்கில மருத்துவத்திலே சரியகிடும்னும்,ஒரு சின்ன தகடும்,எலுமிச்சை பலமும் கொடுத்து,இதை தலை மாட்டில் வைத்திருந்து மூன்றாவது நாள் ஓடும் நீர் நிலையில் போடுங்கனு சொல்லி அனுப்பினார்.அப்பாடா அம்மாவை கஷ்டபடுத்தாமல் விட்டாங்கலேன்னு சந்தோஷப்பட்டேன். ஒருபக்கம் அப்பா தஞ்சாவூருக்கு போவது ,மருத்துவமனை,தங்கும் வசதி பற்றி விசாரித்து மறுநாள் ஜூன் 23 ஆம் தேதி கிளம்ப ஏற்பாடு செய்தாங்க.அம்மாவும் உடனே அழைத்து போகுமளவிற்கு மோசமாக இல்லைன்னு எல்லாமே அவசரமில்லாம செய்துட்டுருந்தோம்.அம்மா பல் விளக்கவும்,பாத்ரூம் போகவும்,உடை மாற்றவும்,துணை தேவைப்பட்டது,ஒரு கை பிடித்திருந்தால் போதும்.ஆனால் என்னாலதான கஷ்டபடுரீங்கனு அம்மா வருத்தபடுவாங்க. அப்பிடிலாம் ஒனுமில்லம்மா,நீ தைரியமா இரும்மானு சொன்னேன்.அன்றே அம்மாவிற்கு மிகவும் பிடித்த நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலுக்கு போய் பிராத்தனை செய்து கொண்டு அங்கிருக்கும் பூசாரி ஒருவரிடம் அம்மாவின் நிலையை சொல்ல வரும் ஞாயிற்றுக்கிழமை வாருங்கள் அம்மனிடம் பூஜித்து கயிறு தருகிறேன் அம்மாவிற்கு கட்டிவிடுங்கள் சரியாகிவிடும்னு ஆறுதல் சொல்லி அனுப்பிவைத்தார்.
மறுநாள் காலையில் தஞ்சாவூருக்கு கிளம்பயிருந்த நிலையில் என் தோழியின் கணவர் மருத்துவர் என்பதால் ஆலோசனை பெற முற்ச்சித்தேன்(என் கணவருக்கு உடல் நிலை சரியில்லாதபோது மிக உதவி செய்தவர்,ஒருமுறை எங்களை தங்கள் காரில் அனுப்பி வைத்துவிட்டு நடந்து வீட்டுக்கு போனவர்கள் )ரேக்கமன்டேசன் கடிதமும் ரெடியாக அக்கம் பக்கத்தினர் நாகையில் நாங்க போகாத சிறந்த டாக்டர் ஒருவர் உள்ளார் அவரிடம் ஒருமுறை கன்சல்ட் செய்துட்டு போங்கனு சொல்ல தஞ்சாவூருக்கு போவதை நிறுத்திவிட்டு அந்த டாக்டரை பார்த்தோம்.அவர் நெஞ்சு மற்றும் வயற்றில் ஸ்கேன் எடுக்க சொன்னார் ,மூன்று பாட்டில் சலின் போட்டு அனுப்பிவைத்தார்.அம்மா தெளிவானாங்க.ஸ்கேன் எடுக்க போகுமிடமெல்லாம் அம்மா உக்கார முடியலன்னு படுத்திகிட்டாங்க ,எத்தனை சுத்தம் பார்க்கும் அம்மா கிடைத்த இடத்தில் படுத்து அசந்து தூங்கியதை பார்த்தபோது ,வைற்றேரிச்சலின் உச்சத்துக்கு போய்தான் வந்தேன்.மூன்று பாட்டில் முடிய இரவு பன்னிரண்டு மணியாகிவிட்டது. வயற்றில் மட்டும் ஸ்கேன் எடுக்கப்பட்டு,எல்லாம் நார்மல்னு ரிப்போர்ட் வந்தவுடன் பெரும் நிம்மதியானது.(அம்மா ஒவ்வொரு முறையும் ஆட்டோவில் போகும்ப்தெல்லாம் அப்பா மற்றும் என் தோலின் மீது சாய்ந்து கொண்டு,கைகளை லேசாக பிடித்துக்கொண்டும்,வருவாங்க. )வீட்டுக்கு போனவுடன் அதிக வாமிட்,இருமல்னு கஷ்டபட்டாங்க.மறுநாள் நெஞ்சுப் பகுதிக்கான டெஸ்ட் எடுக்கபோறோமேனு அவர் கொடுத்த மாத்திரைகளை கொடுத்தோம்.
மூன்றாம்நாள்(ஜூன்23) அம்மாவிற்கு நெஞ்சில் ஸ்கேன் செய்ததில் டிபி அட்டாக் மாதிரி இருக்கு,அதற்கான மாத்திரைகள் தந்தாரே தவிர, டிபி என்றால் எச்சில் டெஸ்ட் எடுக்கப்படும்,அதை சொல்ல வில்லை,நாங்களும் சரி இப்போ இந்த மருந்துகளை கொடுப்போம்,பிறகு என்ன சொல்றார்னு பாத்துக்கலாம்னு விட்டுவிட்டோம்,மேலும் அதே பகுதியில் இன்னொமொரு பகுதி பற்றி தெரிய வேண்டுமென மீண்டும் ஸ்கேன் எடுக்க சொன்னாங்க.அப்போதே மணி மூன்றுக்கு மேலாகிவிட்டது,சீடி ஸ்கேன் பகுதியும் மூன்று மணிக்கு மேல் க்ளோஸ்.மறு நாள் (ஜூன் 24 )டாக்டர் விடுமுறைன்னு சொல்லிட்டார்.ஜூன்25ஆம் தேதிதான வருவார்,அன்றே ஸ்கேன் எடுத்து அன்றே காமிதுக்கொள்ளலாம்னு விட்டுட்டோம். ஹாஸ்ப்பட்டால் போக வர,விசாரிக்க அப்பாவின் நண்பர்,தங்கையின் கணவர்னு சிலர் உதவினார்கள்.நாகையில் உறவினர் பலர் இருக்க எல்லோரும் தெரிந்தும் தெரியாதவராய்,ஒரு சிலர் அம்மாவை பார்த்து நலம் விசாரிக்க வந்துவிட்டு போனவராய் இருக்க,என்னுடைய மற்றொரு தோழி ஒருவர் ஏன் வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் அலைந்து கஷ்டபடுறிங்க என் வீட்டிலே தங்கிக்குங்கனு பல முறை சொன்னது மனதுக்கு ஆறுதலாய் இருந்தது.
நான்காம் நாள் ஜூன் 24 ஆம் தேதி அன்று ஒரே நாள்தான் அம்மா நான் ஊரிலிருந்து வந்ததிலிருந்து முழு நாளாக அம்மாவுடன் வீட்டில் இருந்தோம். [அன்றுதான் அம்மா கடைசி நாளாக எங்களுடன் வீட்டில் இறுக்கிரார்னு தெரியாமல் போய்விட்டது].அம்மா என் மகள் செய்யும் சேட்டைகளை ரசிச்சாங்க,தாத்தாவிடம் வம்பு பன்னாதடன்னு சொன்னாங்க, வீட்டினருகிலுள்ள நர்ஸ் வந்து ஊசிபோட்டபோது (நர்ஸ் ஒரு கிறிஸ்டீன்) அவர் சொன்ன வாசகம் ஒன்று நன்றாக இருந்தது " கடவுள் நம்மால் தாங்கிக்கொல்லும்படியான சந்தோஷங்களையும் மட்டும்தான் தருவார் "எனவே மனதை தைரியப்படுத்திக்குங்க,இதுவரை உங்களுக்கு எந்த உடல் நலக் குறைவுமில்லை என்று சொல்லிவிட்டு போனார்.அம்மா சின்ன பிள்ளை சரின்னு தலையாட்டுவது போல தலையாட்டியது பார்த்து அம்மாவின் நிலை இப்படியாகிவிட்டதேனு நொந்துகொண்டேன்.ஊசி போட்டவுடன் அம்மா நல்ல தூங்கினாங்க.அன்று வியாழக் கிழமை என்பதால் அப்பா கோவிலுக்கு போய் தட்சினா மூர்த்திக்கு(குரு) அர்ச்சனை செய்துட்டு வர சொன்னாங்க,வீட்டில் வேலை,குழந்தைன்னு நேரம் ஓடிட்டு.எனவே மாலை கோவிலுக்கு போய் அம்மா பேரில் அர்ச்சனை செய்துவிட்டு வந்தேன்.அம்மாவிற்கு கஞ்சிதான் உணவு. கிச்சனிலிருந்து சாதாரண சமையல் வாசம் வந்தாலே கதவ மூடுங்க,எனக்கு வாமிட் வருதுன்னு சொல்வாங்க.படுத்தே இருக்காதம்மா,எழுந்து உக்கரும்மானு சொன்ன போது கை காலெல்லாம் வலிக்குது ஆச்சி என்றார்கள்.அப்பா தனக்கு ரொம்ப உதவியாகவும்,ஆறுதலாகவுமிருந்தாங்கனும்,நான் வந்த பிறகுதான் அப்பா நிம்மதியாக தூங்குவதாகவும்,நான் வருவதற்கு முன் இரவில் விழித்து,விழித்து என்ன செய்ற,ஏதாவது வேணுமானும்,முழு ஆகாரமில்லாம இருக்கனு அவ்வப்போது ஹார்லிக்ஸ்,டீனு ரெடி பன்வது,கேப்பதுமே எனக்கு கஷ்டமா இருக்கும்னாங்க, தனக்காக நிறைய செலவு செய்ததாகவும் மற்ற சில விசியங்களும் அவ்வப்போது பேசினோம் (அந்த ஒரு நாள்) யாரவது அம்மாவை பார்க்க வந்தால் அம்மாவிற்கு தெரியாமல் அவர்களிடம் அழுவதும்,அவர்கள் தைரியம் சொல்லுவதுமாக இருந்தது.ஆனால் எங்கம்மா அந்த நிலையிலும் ஆச்சி 'நீ சாப்பிட்டியா பாப்பாவுக்கு சாப்பாடு கொடுத்திட்டியா,பாலாத்தி கொடுத்துட்டு படு' னு சொல்லுவாங்க. அம்மாவின் அந்த விசாரிப்புகளை எண்ணி நெகிழ்வுராமல் என்ன செய்ய முடியும்.அன்று இரவுதான் என் அம்மா என் குடும்பாத்தாருடன் கடைசியாக எங்க வீட்டில் தூங்கினாங்கனு எங்களுக்கு புரியாமல் போய்விட்டது.
ஐந்தாம் நாள் ( ஜூன் 25 )அன்று விடிந்தவுடன் (அம்மாவின் பழக்கம் எழுந்தவுடன் தலை வாரி பிறகு பல்துலக்கி பிறகு காலை மற்றும் அன்றாடக் கடன்களை ,வேலைகளை செய்ய வேண்டும் )பல் துலக்கி மற்ற எல்லா வேலைகளும் என் துணையுடன் செய்தோம்.அன்று காலை நெஞ்சுப் பகுத்தியில் மற்றொரு ஸ்கேன் எடுக்க கிளம்பினோம்.அப்போ அந்த குடல் செருகலேடுக்கும் நபர் கொடுத்த தகட்டை நீர் நிலையில் போடுவதற்காக பார்த்தோம் கிடைக்கவில்லை, தேடினோம் கிடைக்கவில்லை.அன்று வெள்ளிக்கிழமை பத்தரை டு பன்னிரண்டு ராவுகாலமேன்பதால் பத்தரைக்கு முன் கிளம்பு வேண்டுமென கிளம்பினோம்.அம்மாவிற்கு கஞ்சி, மருந்துகள் கொடுத்துவிட்டு,அந்த விநாயகர் கோவிலுக்கு நான் போயிட்டு வந்தேன்.ஒன்பதரை மணிக்கெல்லாம் ஆட்டோவை வர சொல்லி கிளம்பினோம்.{அய்யோ! எங்கம்மா அந்த வெள்ளிக்கிழமை வெளியில் காலடி எடுத்து வைத்தவங்க மறுபடியும் சடலமா வீட்டுக்குள்ள வரப்போறாங்கனு ஒரு துளி கூட நாங்க யாரும் எதிர் பாக்கல !!!}
அன்று சீடீ ஸ்கேன் அரசு பொது மருத்துவமனையில் எடுத்துவிட்டு அந்த மருத்துவரின் தனியார் கிளினிக் சென்று காமித்தோம் .ஸ்வாசப்பகுதியில் இன்பெக்சன் இருப்பதால் டிபி யாக இருக்க்கலாம்தான்னு சொன்னாரே தவிர டீபீக்கான எச்சில் டெஸ்ட் எதுவும் எடுக்க சொல்லல,மாற்று மருந்துகளும் கொடுக்கல,விபரம் விசாரிக்க இன்று அட்மிட் பன்னுங்க,நான் முதலில் கொடுத்த மருந்தே டீபீக்கான முதல் கட்ட மாத்திரைதாணு சொல்லிட்டார்.சலின் ஏற்றப்பட்டது.குழந்தையயை வீட்டில் உள்ளவர்களிடம் விட்டுவிட்டு நானும் அப்பாவும் அம்மாவின் அருகிலிருந்தோம்.சிலர் அம்மாவை நலம் விசாரிக்க வந்த வண்ணம் இருந்தனர்.அன்று இரவு அம்மா அரை இட்லி சாப்பிட்டாங்க.அப்பா வீட்டுக்கு போய்டாங்க,அம்மாவுடன் தனியாக தூங்க அன்று மட்டும் எனக்கு ஒரு இரவு அதிகமாக கிடைத்தது.அன்று என் கணவருடன் நான் போனில் பேசியதையும் மற்றபடி சிலவைகளும் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
ஆறாம் நாள் (ஜூன் 26) விடியற் காலையில் அம்மா ஆச்சி,ஆச்சி போன் அடிக்குது பாரு,உங்கப்பதான் பேசுறாங்களோ என்னவோ தெரியல பாரும்மானாங்க,அங்குமிங்கும் அலைந்த அசதியில் தூங்கிவிட்ட நான் போனை தேடி எடுத்து பார்த்தால் அம்மா சொன்னது சரிதான்.பிறகு அப்பா விசாரித்தாங்க.சாப்பாடு எடுத்துகிட்டு வரேன்னாங்க.அம்மாவை பார்க்க மதுரையிலேர்ந்து என் தாத்தா அம்மாச்சி (என் அம்மாவிற்கு அப்பா அம்மா)வந்திருப்பதாகவும்,அவர்களுடன் வருவதாகவும் சொன்னங்க,பிறகு வந்தாங்க,பாத்தாங்க வருத்தப்பட்டாங்க,மருத்துவரும் விசாரித்துட்டு போனார்.குழந்தையயை சமாளிக்க கஷ்டப்பட்டதால் அன்று மாலை மருத்துவமனையில் என்னுடனே என் மகளை வைத்திருந்தேன் '.மணிக்கு' ஊசி போட போறேன்னு அம்மா முதுகில் ஊசியில்லா சிரஞ்சியயை குத்தி குத்தி விளையாடிய குழந்தையுடன் அம்மா நல்லா பேசிட்ட்ருந்தாங்க.ஆச்சி பாப்பாகிட்ட ஹிந்தியில பேசுன்னு என்னை பேச சொல்லி அதற்கு குழந்தை ஹிந்தியில் பதில் பேசுவதை பார்த்து ரசித்தாங்க,ரைம்ஸ் சொல்ல சொன்னாங்க.ஆனால் அன்று உடலில் அதிக வலி இருந்ததால் வலிக்காக ஊசி போடப்பட்டது.அன்று இரவு அம்மாவிடம் உன்கூட ஒன்றரை மாதம் தகிட்டுதான போனேன்,என்னால மனச விட்டுட்டியாம்மனு கேட்டதற்கு சற்று மௌனத்திற்கு பிறகு அப்படிலாம் ஒன்னுமில்லன்னாங்க,எத்தனை பேரு வெளி நாட்டிலெல்லாம் இருக்காங்கனு ஆரமித்த என்னை பேசாம படுத்து தூங்குனு சொன்னாங்க.பிறகு மருத்துவரிடம் நானும் அப்பாவுடன் போய் இரத்த டெஸ்ட் செய்து பாருங்க,ப்ளட் ஏத்தினா பரவாயில்லைன ஏற்பாடு செய்ங்க டாக்டர்னு சொன்னோம்.
நாங்களா சொன்ன பிறகு டெஸ்ட் செய்யப்பட்டது.என் ரத்த வகை A1 + வ்னு எனக்கு முன்பே தெரியும் .அன்றுதான் என் அம்மாவிற்கும் A1 + வ்னு தெரிந்து கொண்டேன்.ஹீமோக்ளோபின் 13 அளவு இருப்பதாகவும் ,ரத்தம் எத்துமளவிற்கு அவசியமில்லைனும்,இதற்கு மேல் உங்களுக்கு விருப்பம்னா எத்திக்கலாம்னு சொன்னார் .கூடவே நானும் A1 + என்பதால் நீங்க கூட ப்ளட் டொனேட் செய்யலாம்.ஆனால் சாம்பிள் மேச் ஆகலைனா பிறகு நீங்க ரெடி மேட் பேக் தான் வாங்கனும்னு சொன்னதால் ஏன் ரிஸ்க் எடுத்து நேரத்த வீணடித்து பணம் செலவு பண்றதற்கு ரெடி மேட் பேக் வர வைங்க எங்கம்மா தெம்பில்லாம இருக்காங்க டாக்டர்னு சொல்ல ஓகே நாளைக்கு செய்திடலாம்னு சொன்னார்.அன்று இரவுதான் அம்மா அம்மாவாக உறங்கிய நாள்.