Thursday, August 18, 2011

மீண்டும் வருவாயா?

அம்மா நீ எங்கு இருக்கியோ,
எப்படி இருக்கியோ,
என்னுடன்தான் இருக்கியோ
தெரியவில்லை!
எங்களுடன் இருப்பதாக
நம்பிக்கை மேல் நம்பிக்கை
எனும்போது விரக்தியில்
உலாவுகிறேன்.
உன் உயிர் பிரிந்த நிமிடங்கள்
நினைவில் வந்து வந்து
என் சுவாசத்தை விழுங்குகிறது,
என்னையும் அப்பாவையும் தவிர
மற்றனைவருக்கும் உன் பிரிவு
செய்தியாகி,காற்றோடு கரைந்தாகிவிட்டது.
என் அன்னையாக வாழ்ந்ததும்
உனது அன்பும் எனக்கு மட்டுமே புரியும்.
உன் இழப்பில் புதைந்துவிட்ட
எனக்கு மட்டுமே உன் அருமை தெரியும்
என் சோகத்துக்கு மட்டும்  பிறர் மனதை
எதிர்பார்ப்பது  சரியில்லை,
நீ இறந்தபோது கிடைத்த ஆறுதல்களை
இன்றும் பிறரிடம் எதிர்பார்ப்பதும்
மற்றவர்களை சங்கடத்தில் தள்ளுவதாக
உணர்ந்துகொண்டேன்.உதட்டோர ஆறுதல்
வார்த்தைகள் கேட்டுவந்தேன்.
தினமும் நினைத்து ஏங்கும் எனக்கு
உன் நினைவு நாள் உன்னை
காப்பாற்ற முடியாமல்போன
கையாலாகாத நாளாகவே இருந்தது.
உன்னை தீயிலிட்ட அந்த கொடூர
மறுநாளை குறிப்பிட வார்த்தைகள்
தெரியவில்லை. தவச தினத்தன்று
உறைந்திருந்த என்னை அப்பாவின்
கண்ணீர் உருகவைத்தது.
பாட்டி இறந்தன்று அணிந்திருந்த
உடைகளை , முதல் தவசம் முடிந்தும்
கடலில் விட்டுவந்த அப்பாவிற்கு
நீ இறுதியாக அணிந்திருந்த
உடைகளை கடலில் போட
மனதோ,தைரியமோ இல்லை.
பார்க்க நீ இல்லையே என
வருந்தும் சம்பவங்கள் பல.
நல்லவேளை நீ இல்லையென
நினைக்கவைக்கும் சம்பவங்கள் சில.
உன் மரணத்திற்கு பிறகுதான்
எங்கு மரணச் செய்தி கேள்விப்பட்டாலும்
எந்த உயிரை தவிக்கவிட்டு,எந்த உயிர்
பிரிந்ததோயென வருந்துகிறேன்.
பெற்று வளர்த்து இதுவரை
அன்பும்,வாழ வழியும் காட்டியது
போதுமென அழைத்துச் சென்ற
காலனே!எந்த உயிரையாவது
பூமிக்கு அனுப்பும் வரம்
பெறுவாயெனில் என் அம்மாவை
எனக்கு மீண்டும் தந்துவிடு!!!
அம்மாவுடன் இனியொரு முறை
வாழவிடு அல்லது என் அம்மாவுடன்
வாழ்ந்த நாட்களை மீட்டுக்கொடு..../.

22 comments:

மனோ சாமிநாதன் said...

உங்கள் சோகத்தை உணர முடிகிறது. இருந்தாலும் துயரத்திலேயே மூழ்கியிருந்தால் உங்கள் அன்பை நாடும் உங்களின் அன்பிற்குரியவர்களின் மனங்களும் என்றும் வேதனையிலேயே ஆழ்ந்திருக்கும் அல்லவா? உடலுக்கு மட்டும்தான் அழிவு. அன்பிற்கு என்றுமே அழிவில்லை! இன்னொன்று! அன்பான அம்மா கிடைத்தவர்கள் வெகு சிலர் தான். அந்த வகையில் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். அந்த கொடுப்பினை உங்களுக்கு இருந்தது என்ற பெருமிதம் உங்கள் துயரத்தை நிச்சயம் போக்கி விடும்.

சி.பி.செந்தில்குமார் said...

சோகத்திலும் ஒரு சுகம்

ராஜி said...

பதிவில் தங்கள் தா‌ய் பாசம் நன்றாக தெரிகிறது. உங்க அம்மா மறைந்தாலும் கண்டிப்பாய் உங்களுடந்தான் இருப்பாங்க.

குறையொன்றுமில்லை. said...

இதோ இந்தக்கவிதை மூலமாக உங்க அம்மா உங்க
கிட்டதான் இருக்காங்கன்னு புரியுதே.

சாகம்பரி said...

இனி இந்த வலைப்பூவிற்கு வர இனி நான் மிகவும் யோசிப்பேன். ரொம்பவே வலிக்கும் வார்த்தைகள். எதுவோ உள்ளுக்குள்ளிருந்து பிரளயத்தை கிளப்புகிறது. சாரி ஆச்சி.

ஸ்ரீதர் said...

மனது மிகவும் கனத்து விட்டது!

goma said...

இதுவரை ஒரு இடத்தில் மட்டுமே இருந்த உங்கள் அம்மா இனி எங்கு திரும்பினாலும் இருப்பார்கள்.உங்கள் நலம் காத்து நிற்பார்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

உறங்குவது போலும்...

முனைவர் இரா.குணசீலன் said...

காலனே!எந்த உயிரையாவது
பூமிக்கு அனுப்பும் வரம்
பெறுவாயெனில் என் அம்மாவை
எனக்கு மீண்டும் தந்துவிடு!!!

ஒவ்வொரு உயிர்களுக்கும்
ஒவ்வொரு வலி!

வலி தீரும் வழி ?

தமிழ்த்தோட்டம் said...

அருமை பாராட்டுக்கள்

Muruganandan M.K. said...

அம்மாவின் பிரிவுத் துயரம்
உங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் சிந்துகிறது.
அதன் பின் உள்ள வலி
அம்மாவைப் பிரிந்த எனக்கு புரிகிற்து

ஹ ர ணி said...

அம்மா என்பது ஆன்மாவின் வடிவம். அம்மா என்பதற்கு எப்போதும் மரணமில்லை. பெண்களைப் பொறுத்தவரை அம்மா என்கிற ஒரு சொல் அழிவதேயில்லை. நீங்கள் இப்போது அம்மா. உங்கள் பெண் உங்களை அம்மாவென்றழைக்கும் கணங்களில் நீங்கள் அம்மா மட்டுமல்ல உங்கள் அம்மாவைப் போலவே இருக்கிறீர்கள். உங்கள் மகள் உங்களைப் போலவே இருக்கிறாள். இந்த உண்மையை அனுபவியுங்கள்.

RAMA RAVI (RAMVI) said...

வணக்கம் ஆச்சி,தங்களின் இந்த பதிவு பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கிறேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

Rathnavel Natarajan said...

எங்களது மனப்பூர்வ ஆழ்ந்த அனுதாபங்கள்.
காலம் தான் தாங்கும் வலிமையை தர வேண்டும்.
நன்றி அம்மா.

Anonymous said...

உங்கள் சோகத்தை உணர முடிகிறது...அவங்களோட 53 ஆவது வயதில் என் அம்மாவை இழந்த போது...ஏன் என்ற கேள்வி தான் அதிகமாய் இருந்தது...இப்பொழுது அவர்களது நினைவு மட்டும் தான் மிச்சம்...இருந்தாலும் அவங்க எப்பவும் உடன் இருக்கிற நிம்மதி...அது உங்களுக்கும் எப்போதும் கிடைக்க ஏன் பிரார்த்தனைகள்..சகோதரி...

dafodil's valley said...

படித்ததும் மனது கனத்துவிட்டது. அம்மா என்பள் ஒவ்வோரு உயிருக்கும் பொக்கிஷம். அதை ஒரு நேரத்தில் தொலைக்கத்தான் வேண்டியிருக்கிறது. மாற்ற முடியாத உண்மை. மனது வலிக்கிறது தங்களின் இந்த வரிகளை படித்துவிட்டு.

அம்பாளடியாள் said...

மனம் கனக்க வைத்த பகிர்வு .மிக்க நன்றி
பகிர்வுக்கு .

Bobby shankar said...

மனம் கனத்து போய்விட்டது.
தாய்மை அடைந்தப்பின் தாயை அதிகமாய் உணரமுடியும்
தாயை இழந்தவுடன் இன்னும் அதிகமாய் உணர்வோம்

வல்லிசிம்ஹன் said...

அம்மாவை யாரால் மறக்க முடியும்.
நானும் என் அம்மாவை நினைவு கொள்ளும்பதிவை எழுதும்போது மற்றவர்களையும் கஷ்டப்படுத்துகிறோமோ என்று நினைப்பேன்.
இல்லை இதெல்ல்லாம் இந்த வரிகள் நம் அன்னையரை வான்வழியே போய் அடையும்.

goma said...

காலம் ஆற்றும் வரை கவலைகள் வடியாதுதான் ஆனாலும் வாழ வேண்டியிருக்கிறதே

சசிகலா said...

என் அம்மா , அப்பா இருவரையும் இழந்து தவிக்கிறேன் தங்கள் பதிவை படித்ததும் வலி அதிகமானது ...

Unknown said...

மனசு வலிக்குது!

Post a Comment