Thursday, December 23, 2010

அம்மாவின் மண்ணுலக பிரிவு

அம்மா அம்மா என்று கதறி அழ விரும்பும்
 மனதை கட்டுப்படுத்தியவளாய்
பிறப்பென்றால் மரணமும்
வந்தே தீருமேன்றாலும்
புல் பூண்டுகளையும்
விலங்குகளையும் விட
பாக்கியம் பெற்றவர்கள்
மனிதப் பிறவிகள்
என்றிருந்தேனே!
உன்னை பிரிந்தவுடன்
மரணிக்கவே பிறக்கிறோம்
இடையில் ஏனிந்த   நவரசங்கள்
புல் பூண்டுகளே ! நீங்கள்தான்
பாக்கியம் பெற்றவர்கள்
என் சுக துக்கங்களை
பகிர உனக்கு
நிகர் நீயேதானம்மா!..
நீ இல்லாத இவ்வுலகில்
எத்தனை உறவுகளுடன்
சுகங்களுடனும்
வாழ்ந்தாலும் இனி என்
வாழ்க்கை உப்பில்லா
விருந்துக்கு இணையம்மா!
என் ஜனனத்திலேர்ந்து என்
மகள் ஜனனம் வரை  எத்தனை
பூரிப்புடனும்,பொறுப்புடனும்
சேவைகள் செய்த உனக்கு
பதில்  சேவைகள் செய்ய கூட
அவகாசமில்லாமல் அவசரமாய்
அரை நூற்றாண்டு வாழ்ந்தது
போதுமென காலன்
அழைத்து போய்விட்டானேயம்மா!
உயிர் பிரியப்போகிரதேன்று
தெரிந்தவுடன்  என்னை
எப்படியாவது காப்பாற்றுங்களேன
சொல்லாமல்,உறவுகளை
அழைத்து ஒற்றுமையாக
இருங்கள் என் பெண்ணை
பாத்துக் கொள்ளுங்கலேன்று
சொன்னாயேயம்மா !அவசர ஊர்தியில்
செல்லும்போது 'நான் யாருக்கு
என்ன பாவம் செய்தேன்,எனக்கேன்
இந்த நிலையென'உன் கண்கள்
பேசியதை உணர்ந்தேனே அம்மா !! 
கடைசி  பதினெட்டு  மணி  நேரங்கள்
அவசர  சிகிச்சை பிரிவிலிருந்தும்
முழு நிதானமுடன் பேசிய நீ
கடைசி ஐந்து நிமிடங்களில்
அமைதியாக உயிர் நீத்தாயேம்மா!
எதுவும் செய்ய இயலாதவளாய்
உயிர் நீத்தலின் அசைவென்று
தெரியாமல் உன் கடைசி
அசைவையும் விரக்தியில்
வேடிக்கை பார்த்தேனேம்மா!
விபத்துக்குள்ளாகியோ,
புற்றுக்கட்டியிலோ அவதிப்
பட்டிருந்தால் கூட உன்
பிரிதலில் நியாயமுண்டு
என்ன மாயமென்று
மருத்துவருக்கும்
புரியவில்லை,எங்களுக்கும்
தெரியவில்லை,மக்கள்
நிரம்பி வழியும் உலகில்
உன் ஒரு உயிருக்கு
இடமில்லையேம்மா!
நீ இன்னமொரு நான்கைந்து
ஆண்டுகள் ஜீவித்திருந்தால்
கூட என் மனம் ஆறுதல்
பட்டிருக்குமேம்மா!உன்
மன உளைச்சலுக்கு
மரணம்தான் விடிவா?
உன்னை கண்ணீரீனால்
அழிக்கமுடியாமல்
தீயினால் அழிக்கவைத்து
விட்டானேயம்மா!உனது
தாய் தந்தைக்கு செய்யவிருந்த   
கரும காரியங்களை  
ஏற்றுக்கொள்ள  தகுதி
இல்லாதவர்கலேன்றா
அவர்களை உனக்கே காரியம்
செய்ய வைத்துவிட்டாய்! 
 எனக்கு தண்டனை உன்
மரணம்தானா?
நீ உயிர் நீத்ததையும்
கடைசியாக உனக்கு
பட்டு சேலை உடுத்தி,
நகைகளும்,பூ மாலைகளுமாக
மங்களகரமாக படுத்திருந்த
உன்னை உத்து பார்த்து
அழவா என்னை இத்தனை
ஆண்டுகள்  பாதுகாத்து  வளர்த்தாய்?
எத்தனை ஆண்டுகள் எனக்கு
தலை வாரி அழகு பார்த்திருப்பாய்!
கடைசியாக நான் பின்னிவிட்ட
பின்னலுடன்  அம்மன் சிலை போல
அபிசேகித்து  நீராட்டியதை
பார்த்து வெதும்பியவளாய்
உனக்கு கடைசிக் காரியமும்
செய்துவிட்ட எனக்கு  
வரப்போகும் மரணமோ
ஏதேனும்  துயரமோ
ஈடாகதம்மா!இனி நான் யாரை
அம்மானு அழைத்தாலும் உன்னை
வாய் நிறைய அம்மா அம்மானு
அழைத்ததற்கு ஈடாகாதம்மா!
ஓசையுடன் அவசர
ஊர்தி சென்றாலே,யாருக்கு என்னாகப்
போகிறதோ யார் என்ன வேதனை
படுகிறார்கலோனு மனம் கணக்கிறதம்மா!
பேத்தி வளருவதையும்,பேசுவதையும்
பார்த்து,கேட்டு சந்தோஷப்பட்ட
உன்னை நினைத்து அழும்போது
மூன்றரை வயதான உன்  பேத்தி
'மணி  போட்டோவில் நம்ம வீட்டில்தான
இருக்கு நீ ஏம்மா அழுகிறனு'
சொல்லும்போதும்,எதாவது யோசித்து
அமர்ந்திருந்தாலும்,முகம் சோகமானாலும்
மணிய பாத்து அழுகப் போறியாம்மானு ?
கேக்கும் உன் பேத்திக்கு
என்ன பதில் சொல்வேனம்மா!
நீ வாங்கி கொடுத்த பொருளெல்லாம்
இருக்க,உன்னை பரி கொடுத்துவிட்டு  
 நான் யாரை
நினைத்து வேதனைப்படுவேனம்மா ?
நான் அம்மவாகிவிட்டாலும்
உயிருக்கு உயிராய் என்னை
நேசித்த என் அன்பான
அம்மா இன்மையினால் 
ஏங்குகிறேனேம்மா  !  
இணையத்தளம் பற்றி எனக்குத்  
தெரிந்தவற்றை   விளக்கியபோது
'ஒன்னும் புரியல போம்மா  'என்று 
வெள்ளந்தியாய் சொன்ன உன்னை    
உயிர்களை கொள்ளவே பிறந்த
மரண ஜந்து உன்னையும்
கவ்விக்கொண்டுப் போன
     ஆதங்கத்தில்
இந்த பூமியில் வாழ வழி செய்து
தந்த உன்னை, உன் நினைவுகளை
 இணையதளத்திலே பதிவு 
செய்துருக்கிறேனம்மா!!!  





     

5 comments:

  1. குடும்ப உறவுகளை, அதிலும் அம்மாவின் மேல் மிகுந்த பாசம் கொண்டு எழுதிய பதிவுகள் அனைத்தும் படித்தேன். அரியானா மாநிலத்தில் இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள், நிறைவான எழுத்து நடை உங்களுக்கு கைவருகிறது, அந்த மாநிலத்தில் உங்கள் வாழ்வின் அனுபவங்களை பற்றி எழுதுங்கள் ...

    ReplyDelete
  2. அன்னை பற்றிய உணர்வுகளை மிக நன்றாக உங்கள் வார்த்தைகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. அருமை. உங்கள் பதிவு நெகிழ்வூட்டுகிறது.
    உங்களுக்கும் எம் வந்தனங்கள்..

    ReplyDelete
  3. இதையெல்லாம் பார்க்கவும் ,கேக்கவும் என் அம்மா இல்லைஎன்ற குறையில் கலங்கிய கண்களுடன் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் செந்தில். வ.இந்திய அனுபவங்களைப் பற்றி எழுத வேண்டுமென்ற எண்ணம் எனக்கும் உள்ளது.விரைவில் முயற்ச்சி செய்கிறேன்.

    ReplyDelete
  4. நன்றி பாரத்..பாரதி..

    என் பதிவுக்கும் பின்னூட்டம் கிடைத்துள்ளதென்ற மகிழ்ச்சியில் தங்கள் வந்தனம் என் அன்னைக்கு உரித்தாகட்டும்.

    ReplyDelete
  5. அன்பு திருமதி ஸ்ரீதர்,இனி வழக்கமாக உங்கள் பதிவிற்கு வரவேண்டும். வருந்தாதீர்கள் அம்மா. குழந்தை முகம் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக ஆறுதல் அடைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete