அம்மாவின் உலகத்தை மாற்றியவர் என் மகள்தான். நான் பெற்றேடுத்தேனே தவிர மனதாலும், போனிலும், நேரிலும் வளர்த்தவர் என் அம்மாதான். என் கணவரும் தன் அளவிற்கு அன்பும், அக்கறையுமாக குழந்தையிடம் உள்ளார் என்பதில் அம்மாவிற்கு தனி தெம்புதான். என் அப்பாவிற்கு என்னை மீண்டும் மகளாக்கியவரும் என் மகள்தான்.கரு உருவானபோது நானும் அம்மாவாகி எப்படி வளர்க்கப்போகிறேன் என்று நினைத்ததெல்லாம் தேவையில்லாத பயமேன்ரும்,எனக்கொரு குழந்தை வராமல் போகியிருந்தால் என் வாழ்க்கையே அர்த்தமில்லாததாகியிருக்குமென உணர்த்தியவரும் என் குறும்பான மகள்தான்.
அம்மா முதன் முதலில் குழந்தையயை என்னிடம் எடுத்துக் கொடுக்கும்போது என்னைவிட அம்மா முகத்தில்தான் அதிக பூரிப்பு,சிசரியனாலும்,தாய்ப்பாலின்மையாலும் ,முதல் உணவாக குழந்தைக்கு குளுக்கோஸ்தான் கொடுக்கப்பட்டது,அம்மாவிற்கு ஆயிரம் சந்தேகம்,தொடர்ந்து குளுக்கோஸ் கொடுக்கலாமா,பால் பவுடர் கொடுக்கலாமா,தாய்ப்பால் எப்போது கிடைக்கும்,என்ன செய்ய வேண்டும் .......,என அம்மா நர்சிடம் குடைந்தெடுக்க, நர்ஸ் கடுப்பாகி பால் பவுடர் கொடுக்க சொல்ல,உடனே அம்மா பால் பவுடர் வாங்க கடைக்கு சென்ற அம்மா பதட்டத்துடன் வந்து சொன்னது 'ஆச்சி குழந்தையையை பத்திரமாக பார்த்துக்கோ,பத்தரை மணிக்கு மேல் ஆகிவிட்டதால் ஹாஸ்பிட்டல் வெளி கேட் லாக் செய்துட்டாங்க,நர்ஸ் எங்க இருக்காங்கனு பாத்து, கேட் திறப்பாங்கலானு விசாரிச்சுட்டு வரேன்னு' தவிப்புடன் போனாங்க.மாடிக்கும்,கிரவுண்ட் ப்லோற்கும் நடந்து தேடி விசாரிச்சவருக்கு பதில் வெளியில் செல்ல அனுமதி கிடையாதுன்னு வரவே அம்மாவுக்கு மனம் மட்டுமல்ல,முகமும் வாடிவிட்டது.என்னருகில் குழந்தை கதரிகொண்டிருக்க எனக்கு அம்மா மற்றும் குழந்தையின் முகங்களை வேடிக்கைதான் பார்க்கமுடிந்தது .
சில நிமிடங்களில் நர்ஸ் ரூமிற்கு வந்து விசாரிக்க,இப்போதைக்கு குளுக்கோஸ் கொடுங்க அல்லது பக்கத்தில் யார்கிட்டயாவது பால் பவுடர் இருந்த வாங்கி கொடுங்கனு நர்ஸ் சொன்னவுடன் அம்மாவிற்கு ஆத்தாமை தாங்கல,முதன் முதலில் தர வேண்டியதை பால் பவுடரை கூட கடன் வாங்கனுமா,நான் வாங்கமாட்டேன் நீங்க கேட்ட திறங்க,டாக்டர கூப்பிடுங்கன்னு அம்மா ரெண்டு நிமிடத்தில் சுய நினைவே இல்லாதமாதிரி கத்த ஆரம்ச்சிடாங்க,பிறகு அந்த நர்சே எங்கிருந்தோ பால் பவுடர் எடுத்து வந்து அம்மாவை விளக்கிட்டு சிரஞ்சி மூலமா கொடுத்தாங்க,அம்மாவுக்கு ஒரு பக்கம் வருத்தமிருந்தாலும்,அழுகையை நிறுத்திய குழந்தையை பரிதாபமாக பார்த்து கண்ணீர் விட ஆரம்ச்சிடாங்க,அம்மாவின் அந்த நிலை பிரசவ வேதனையை விட மேலாக எனக்கு பட்டது .
இரவில் அம்மாவிற்கு தூக்கமே வராது,வந்து வந்து குழந்தையை பார்த்துட்டு போவாங்க,நீ தூங்கு அச்சி நான் பாத்துகிறேனு சொல்வாங்க,பகல் நேரத்தில் என் கணவரும் வீட்டுக்கும்,ஹாஸ்பட்டளுக்கும் வந்து போய் மிகவும் உதவியாக இருந்தார்.இத்தனை அக்கறையான அம்மா இருந்தாலும் என் கணவர் என்னுடன் இருக்கும்போது மட்டுமே முழுமையாக உலகில் இருக்கிறோம் என்பது போல என்னால் உணர முடிந்தது.
எதுவும் அறியாத பச்சிளம் குழந்தையயை நாம்தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற உணர்வு எனக்கு இருந்தால் கூட,என் அம்மா இல்லாமல் அந்த குழந்தை எனக்கு கிடைத்திருந்தால் என் குழந்தையின் நிலை பரிதாபமாகத்தான் போகியிருக்கும்,ஏனென்றால் அம்மா அந்தளவுக்கு குழந்தையின் மீது கவனம் செலுத்தினாங்க,ஓஹோ ! குழந்தையயை இப்படியெல்லாம் பத்திரமாக பாத்துக்கனுமா,அம்மா என்னையும் இப்படிதான பார்த்து வளத்திருப்பாங்கனு நினைத்துக்கொள்வேன்,
ஒரு குழந்தை பிறக்கும்போது அம்மாவும் கூடவே பிறக்கிறாள் என்பது எனக்கும் பொருந்தியது,கூடவே என் அம்மா மீண்டும் தாயானார் என்பதுதான் எனக்கு புலப்பட்டது.
ஒவ்வொரு முறையும் பயமுடன்,பார்த்து பார்த்து குழந்தையயை தூக்குவதும்,அதன் அசைவுகளும்,அழகாக தூங்குவதும் , அழுவதும்,கண்களை விளித்து பார்க்கத் தெரியாத நிலையில் கூட அழகாக சிரிப்பதும் ,குறிப்பாக தூக்கத்தில் சிரிப்பதும் குழந்தைக்கு நிகர் வேறதுமில்லை.என்னை மிக வியக்கச் செய்தது சில முறை அம்மா உட்பட யார் தூக்கினாலும் அழுகையை நிறுத்தாத குழந்தை என்னிடம் வந்தவுடன் அழுகையை நிறுத்தி விட்டது."பாத்தியா அம்மாவை எப்படி கண்டுபிடிக்குது பாத்தியானு " எல்லோரும் ஆச்சரியப்படுவாங்க.
ஒன்பது நாட்கள் ஹாஸ்பட்டல் வாசம் முடிந்து வீடு திரும்பினோம்.ரெண்டு நாட்களில் கணவர் வட இந்தியாவிற்கு புறப்பட்டார்.கண்ணை கட்டி காட்டில் விட்டது போல என்பதற்கு அன்று அர்த்தம் உணர்ந்தேன்,போனில் பேசப்போறோம்,மறுபடியும் சந்திப்போம் என்றாலும் அன்றைய பிரிவு கையில் குழந்தையுடன் ரண வேதனைன்னு சொல்றதை தவிர வார்த்தை தெரியல.அம்மாவிற்கு லேசான வருத்தம் கூட நாங்கள் இத்தனை பேர் இருக்க,கவனிக்க ஆளில்லாதது போல அழுகிறியேனு சொன்னாங்க..அம்மாவிற்கு என் வேதனை புரிந்தாலும் என்னை சமாதானபடுத்த வேறன்ன சொல்ல முடியும். பிறகென்ன மனதை தேற்றிதானே ஆகவேண்டும்
என் வீட்டில் ஒரு சின்ன ஜீவன் வந்ததில் எல்லோரிடமும் சின்ன மாற்றம்,புதிய அனுபவம்,தம்பி,தங்கையிடம் கூட சின்ன ஜீவனை கவனித்துக் கொள்வதில் அக்கறையை பார்க்க முடிந்தது,அப்பாவோ சுத்தமாக மாறிவிட்டார்,சொல்லப்போனால் அப்பாவும் குழந்தையாகவே மாறிவிட்டார்.ஒவ்வொரு நாளும் குழந்தையின் முகத்தில் மாற்றங்கள்.இதுதான் குழந்தையின் முகம் என ஞாபகம் வைத்துக்கொள்ளவே சிரமம்,தினமும் மாற்றங்கள்.குழத்தைக்கு காப்பிடுதல்,பெயர் வைத்தல் எல்லாம் அப்பா சுற்றம் சூழ சிறப்பாகவே நடத்தினாங்க. அதிகம் கோவிலுக்கு போகாத அப்பா குழந்தையயை முதன் முதலாக கோவிலுக்கு அழைத்துச் சென்ற போது அப்பாவும் வந்தாங்க,அத்தனை மாற்றங்கள்.(ஆனாலும் அம்மா நோகும் படியான சின்ன சின்ன சங்கடங்கள்)
அம்மா குழந்தையயை குளிக்க வைப்பதும்,மருந்து கொடுப்பதும்,அழகழகான ட்ரஸ் போட்டு பார்ப்பதும்,வீட்டு வேலைகளுக்கிடையில் வந்து குழந்தையிடம் கொஞ்சி செல்வதும்,வேலை முடிந்தவுடன் அருகிலே அமர்ந்து ரசிப்பதும்,குழந்தைக்கும் எனக்கும் என்னென்ன செய்யனும் செய்யக்கூடாதுனு அக்கம் பக்கத்தாரிடம் விசாரித்து தேவைகளை பூர்த்தி செய்வதும்,தடுப்பு ஊசி போட நீ வீட்ட்லே இரும்மான்னு தானே குழந்தையயை தூக்கிட்டு போயிட்டு வந்ததும்,நான் வ.இந்தியாவிற்கு சென்றால் தனியாக குழந்தையயை கவனிக்க வேண்டும்,அதற்கான இன்சற்றக்சன்சகளும்,{அசந்து தூங்கிடாத,எந்த வேலையானாலும் குழந்தை கவனிப்புக்கு பிறகு செய்,குழந்தைக்கு விவரம் தெரியும் வரை நாம் எதுக்கும் அலுப்பு படாமல் கவனிக்கணும்,கண்டத சாப்பிட கொடுக்காத, காரம்,புளிப்பு அதிகம் சேர்த்துக்காத,கண்டவைகளை குழந்தை வாயில் வைக்காமல் பார்த்துக்கோ,மருந்துகள்;,துணிகள், கனமான பொருட்களை குழந்தைக்கு எட்டும் தூரத்தில் வைக்காத,யூரின் பாஸ்களை அடிக்கடி செக் செய்,சளி பிடிக்கமால் பார்த்துக்கோ,அக்கம் பக்கத்தினரிடம் கேப்பதை விட அருகிலுள்ள தமிழ் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டுக்கோ,குழந்தைக்கு எதாவது சிரமம் என்றால் உடனே மருத்துவரிடம் போ,,,,,.....இத்யாதி, இத்யாதி....}அந்த விலை மதிப்பில்லாத அன்பை எனக்கும் என் குழந்தைக்கும் யாராலும் தர முடியாது.
வீட்டிற்கு அருகில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது.அம்மாவிற்கு பெரிய ஆறுதலானவர அந்த விநாயகர்தான்.தினமும் தோட்டத்தில் உள்ள செம்பருத்தி பூக்களை மாலை தொடுத்து அவருக்கு அணிவித்த பின்தான் அம்மா காலை உணவே சாப்பிடுவாங்க,வேறதுவும் வேலைன்னா மத்தியம் வெயில் கூட பார்க்காமல் விநாயகர் கோவிலுக்கு போயிட்டு வருவாங்க,அம்மாவிற்கு அடுத்த ஆறுதல் தையல் மெசின்,வீட்டுக்கு மட்டும் தைப்பார்கள்,எனக்கு எத்தனையோ சுடிதார்,ப்ளவுஸ்,குழந்தைக்கு எத்தனையோ ட்ரஸ் தைத்து தந்திருக்காங்க.
நாட்கள் ஓடியதே தெரியவில்லை,மூன்றரை மாதங்களுக்கு பிறகு வ.இந்திய புறப்பட தயாரானோம்,அந்த பிரிவு அம்மாவால் ஜீரணிக்க முடியவில்லை எனினும் மகளின் வாழ்க்கை கணவருடன் சேர்ந்து வாழ்வதுதானே நீதி,அதை மனதில் வைத்துக்கொண்டு அம்மா வழியனுப்பினார்,வீட்டில் அனைவருக்கும் நாள்தோறும் நம் கண்முன் வளர்ந்த குழந்தை புறப்படுவதில் வருத்தம்தான்,எனக்கு தாய் வீட்டு சூழலை மிஸ் பன்னுகிறோம்னு வருந்தினாலும்,நமக்கு பாலமாக போன் இருக்குதேன்னு அம்மாவுக்கும் ஆறுதல் சொல்லி கிளம்பினேன்,அப்பா தன் பங்கிற்கு ஒரு அப்பாவாக 'உன்னை பார்த்துக் கொள்ளவே ஒரு ஆள் வேணும் ஆனால் நீதான் இனி குழந்தையையும்,கணவரையும் கவனிச்சக்கணும் ,குழந்தைதனமா இருக்காத ,கணவர் சம்பாரிப்பதில் சிக்கனமாக இரு ,எங்களுக்கு பிறகு உனக்கு கணவரும் அவரின் சுற்றங்களும் உன்னுடயவாக நினைத்து செயல்பாடு'.... ,,,,,.....இத்யாதி, இத்யாதி..கணவர் வந்து அழைத்துச் சென்றார்.அழைத்துச் செல்ல வந்தவருக்கு குழந்தையை பார்த்த போது அவரால் நம்பவே முடியல,பதிமூணு நாள் குழந்தையில் பார்த்தவர் இப்போ மூன்று மாத குழந்தையாய் நல்லா வளர்ச்சி,தானே திரும்பி படுத்துக்கொல்லுமலவிற்கும்,நம்முடைய அசைவகளுக்கு ரச்பான்ஸ் செய்கிற,நன்றாக முகம் பார்த்து சிரிக்கிற,தானாக ஆஹ,ஓஹ் ,இக்ஹ ,ஹா னு சிலாகிக்ற குழந்தையயை பார்த்து அவருக்கு மிக ஆச்சர்யம் ,
எப்போதும் மாமியார் வீட்டிலிருந்துதான் வ.இந்திய புறப்படுவோம்,அம்மா தன் வீட்டிலிருந்து வழியனுப்பியதில் திருப்தி இல்லாமல் மாமியார் வீட்டிலிருந்து புறப்படும் கடைசி நாளன்றும் மாமியார் வீட்டுக்கு வந்து வழியனுப்புவாங்க ,,மாமியார் வீட்டிலும் தன் வீடு போலவே வேலை செய்வாங்க ,பேகிங் செய்து தருவாங்க ,வீட்டை விட்டுச் செல்லும்போது நானும் சிறிது நேரம் வழியில் அழுதுகொண்டேதான் போவேன் எங்களை அனுப்பியபின் மனதார தனக்குதானே அழுவாங்கலாம் மாமியாரின் சுற்றத்தார் சொல்வாங்க ,போனில் " எம்மா இப்படி அழுதியாம்மானு " கேட்டால் அதெல்லாம் ஒண்ணுமிள்ள நீ எதுவும் தப்பா நினைக்காத , வருத்தபடாத,
என்னால தாங்கமுடியல ஆச்சி,ரெண்டு நாட்களில் நான் சரியாகிவிடுவேன் ,நீ குழந்தையயை பத்திரமாக பார்த்துக்கோ ,கணவருடன் நல்லபடியாக வாழவேண்டும்,அதுதான் எங்களுக்கு பெரிய சந்தோஷம்னு சொல்வாங்க.
பிறகு மூன்று மாதங்களில் அம்மாவையும்,மாமியாரையும் வ.இந்தியாவிற்கு அழைத்து வந்தோம்,முதன் முதலாய் வந்தவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட மனிதர்களும்,கலாச்சாரங்களும் வியப்பிலும்,சில சம்பவங்கள் நகைப்பிலுமாக எப்படியோ ஒரு மாதம் தங்க வைத்து அனுப்பினோம், சுற்று வட்டாரத்தில் உள்ள ராஜ் காட்,செங்கோட்டை ,அக்சர்தாம்,லோட்டஸ் டெம்பிள்,பாலிகா பஜார்,உள்ளூர் பஜார்களுக்க் அழைத்துச்சென்றோம்,இருவருக்கும் அவரவர் பிள்ளைகளுடனும்,பேத்தியுடனும் புதுமையான சூழ்நிலையில் நாட்களை கழித்ததில் சந்தோஷம்தான்.இங்கு வந்தும் என் குழந்தை மாமியாரை விட அம்மாவின் அரவணைப்பில்தான் அதிகம் இருந்தது,தன் மகளையும்,பேத்தியையும் எந்த குறையுமில்லாமல் மருமகன் கவனித்துக்கொள்வார் என்பதில் அம்மாவிற்கு முழு சதவிகித நம்பிக்கை வந்தது.
குழந்தை தவழ ஆரம்பிப்பதை அம்மா பார்க்கவில்லை,தவழ்ற குழந்தை தானாக முதல் முறையாக உட்காரந்ததை பார்த்த அம்மாவிற்கு எவ்ளோ சந்தோஷம்,பிறகு நடக்க,பேசுவதற்கு ட்ரைனிங் கொடுப்பாங்க.ஜான்சனன்ட்ஜான்சன் ஆயில் விளம்பரம் ஒன்றில் அம்மா போன் பேசிக் கொண்டிருக்கும்போது தன் குழந்தை முதன் முதலாக அடி எடுத்து நடக்க ஆரம்பிப்பதை பார்க்கும் அம்மா மிகவும் ரசித்து மகிழ்வார்,அந்த விளம்பரம் பார்க்கும்போதுலாம் அம்மா நினைவுதான் வரும்.ஏன்னா ,அந்த விளம்பரத்தில் வரும் அம்மாவின் நடிப்பு மிக நேட்சுரளாக இருக்கும்,என் அம்மாவும் அந்த பொண்ணு நிஜமாகவே சந்தோஷப் படுவது போலவே நடிச்சுருக்கு பாருன்னு சொல்வாங்க.. அம்மா தமிழ் நாட்டிற்கு போகும்போது எத்தனை பேர் இருந்தாலும் உன் நினைவாகவே இருப்பேன்,இனி என் பேத்தியையும் சேர்த்து நினைத்துகிட்டே இருப்பேனு சொன்னாங்க.நாங்க நல்லபடியாக இருப்போம்,நீ உன் உடல் நலத்தில் கவனம் செலுத்தும்மானு சொல்லி அனுப்பினேன்.
அம்மா ஊருக்கு செல்ல மற்றொரு காரணம் அப்பாவை விட்டு இத்தனை தூரம், இத்தனை நாட்கள் பிரிந்து இருந்ததில்லை ,தமிழகம் சென்ற அம்மா தன் வ.இந்திய பயணம் பற்றியும்,மருமகன்,மகள்,பேத்தி பற்றி அப்பாவிடமும் எங்கள் நல விரும்பிகளுடனும் சொல்லி சந்தோஷபட்டாங்கலாம்..
முதலில் எனக்காக ஏங்கிய அம்மா ,இப்போ பேத்திக்காகவும்(என்று சொல்வதை விட இன்னொரு மகளுக்காகனுதான் சொல்ல வேண்டும்)ஏங்க ஆரமிச்சிடாங்க,அவங்கள சுத்தி எத்தனையோ விஷயங்கள் நடந்தாலும்,அம்மாவின் மைய புள்ளி நாங்க தான்.அம்மாவின் உலகமே நாங்கதான்,எங்களின் நல் வாழ்க்கைக்காக கோவிலுக்கு செல்வதும்,குழந்தைக்கு ட்ரஸ் தைப்பதும்,செமிக்கி,மோத்திகள் வைத்து அலங்கார படுத்துவதும்,எங்கு சென்றாலும் பேத்திக்காக ஏதாவது வாங்கி வைத்திருந்து பேக் பன்வதும்தான் அம்மாவின் முக்கிய வேலை,கூடவே போய் வந்த கோவில்களின் விபூதி குங்குமமும். ஊரிலும் ,உறவுகளிலும் நல்ல & துக்க விசயங்களுக்கும் கலந்துப்பாங்க,அங்கு எங்காவது குழந்தையை பார்த்தால் போதும் "ஆச்சி எனக்கு பாப்பா நினைவாகவே உள்ளது,நீங்க சென்னையில் இருந்தால் கூட நானே பஸ் பிடிச்சு வந்துடுவேன்,ரெண்டு நாள் உங்களுடன் தங்கிட்டு போவேன், இவ்ளோ தூரத்தில் இருக்கீங்க,வந்தாலும் உடனே போயிடுறீங்க,எப்ப இந்தபக்கம் வரபோறிங்கனு நொந்துப்பாங்க.ஏம்மா இப்படி வருத்தபடுற ,தினமும் போனில் பேசுறோம்,இங்கயே இருக்கப்போறதில்ல,நம்ம ஊரு பக்கம் வருவோம்,வருவோம்னு சொல்லுவேன்.
அம்மா சில நேரங்களில் போன் செய்யும்போது வேலையாக இருந்தால் கூட பிறகு பேசுறேன்னு சொன்னால் வருத்தபடுவாங்கலேன்னு லவுட் ஸ்பீக்கரில் போட்டு பேசிக்கொண்டே வேலை பார்ப்பேன்.அம்மாவிற்கு நான் போன் செய்யும்போது என்ன வேலை இருந்தாலும் என்கிட்டே பேசிட்டுதான் செய்வாங்க,மிஸ்டு கால் பாக்கலாம் கத்துகிட்டாங்க, வேற ஏதும் அழைப்புகள் இருந்தால் கூட எனக்குதான் முதலில் போன் செய்வாங்க.குழந்தை என்ன செய்து, பொறுமையா செய்,அழகா தலை வாரிவிட்டு,அப்பப்போ சுத்தம் செய்து,நிறைய பேச்சு கொடு,வீட்டுக்குள்ளயே இல்லாமல் வெளி இடங்களையும் பார்க்க வை,இத்யாதி,இத்யாதி ..
கொஞ்சம் வளர்ந்தவுடன் (நாங்கள் இரண்டாவது மாடியில் உள்ளதால்)கணவர் இருக்கும்போதே வெளிவேலைகளை பார்த்துவிடு.(வரண்டாவை சுத்தம் செய்வது,குப்பை போட செல்வது இத்யாதி)பார்த்து அயன் செய்,வாசலில் சின்ன காம்பௌண்டு என்பதால் கிழே எட்டி பார்க்கிறேன்னு விழுந்திடாம பாத்துக்கோ நாற்காலியில் ஏறி சவிச் போடாம பாத்துக்கோ,ஹீட்டரை பார்த்து உபயோகி, இத்யாதி.. மேல் சொன்ன குறும்பெல்லாம் என் குழந்தை செய்வாள்,இப்படியெல்லாம் சேட்டை செய்கிறால்னு நான் சொன்னதனாலேயே அம்மா எச்சரிக்கை செய்வாங்க, என் அஜாக்ரதையால் குழந்தைக்கு சில தொந்தரவுகள் வந்தது,எனவே அம்மா எல்லாம் சொல்வாங்க,அவங்களுக்கு சரிம்மானு ஸ்ட்ராங்கா சொன்னாலே பெரிய நிம்மதி.குழந்தையின் போட்டோ அனுப்பினால் போதும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்து ரசித்து கொண்டே இருப்பாங்களாம்.
குழந்தையின் ஒரு வயதில் மாமியார் வீட்டிற்கு வந்து அம்மாவுடன் முதல் பிறந்தநாள் கொண்டாடி இரு குடும்பத்தார் மற்றும் சில உறவினர்கள் முன்னிலையில் என் அப்பா மற்றும் தம்பி மடியில் உக்காரவைத்து மொட்டையடித்து,காது குத்தியாச்சு. ஆனால் இந்த வைபவம் நிகழ்வதற்குள் அம்மா யார் யார் கிட்ட எப்பிடிலாம் கஷ்ட பட்டு,சமாளித்து ஒரு பிரச்சனையும் இல்லாத மாதிரி சுமுகமா நடத்தினாங்கன்னு எனக்குத்தான் தெரியும்.ஒவ்வொரு முறையும் ஊருக்கு வந்துட்டு போகும்போதெல்லாம் அப்பா தருவதை தவிர எனக்கும் என் குழந்தைக்கும் அம்மாவின் சேமிப்புகளும் , பர்சேஸ் செய்த பொருட்களையும் வாங்கிட்டு வருவேன் ,பணம் வேண்டாம்மா உன் செலவுக்கு வச்சுக்கொன்னா கேக்கமாட்டாங்க,உனக்கு கொடுக்கத்தானே வச்சுருந்தேன்,நான் என்ன செய்யபோறேன்னு என் வாயடைத்து கண்ணீர் வர கண்களை திறந்திடுவாங்க[என்னால் இப்போதும் அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை ] அப்போதும் ஒருவருக்கொருவர் அழுதும் அழுகாதது போல பிரிந்து செல்லும் அந்த வினாடிகள் கடுமையானது,ஊருக்கு போய்விட்டால் என் குழந்தையயை கோவிலுக்கு ,கடைகளுக்கு அழைத்து போவதும்,இப்போ எவ்ளோ உயரம் இருக்கனு அளவெடுத்து ட்ரஸ் தைப்பதும் அந்த அன்பின் பரிமாணத்திற்கு அளவும் வடிவமும் இல்லை...
குழந்தை நடக்க துவங்கும்போது குளிர்காலமும் துவங்கிவிட்டது,குளிரையும்,குழந்தையையும் சமாளித்தது பெரும்பாடாக இருந்தது,அம்மா எங்களுக்காக அனைத்து சேனலிலும் ந்யுசும் பாப்பாங்க,வ.இந்திய சம்பந்தமான செய்திகள் எனக்கு முன் அம்மா பாத்து சொல்லுவாங்க,அது போலவே குளிர்காலத்திலும் ந்யுசில் காமிக்கும் பனிப்பொழிவைப் பார்த்து புலம்பி தள்ளுவாங்க,எத்தனை நாள் சமாளிப்ப,கணவரிடம் சொல்லி தமிழ் நாட்டு பக்கம் வந்துடுங்க,குளிர்,வெயில் ஜாஸ்த்தியா இருக்கு,நில நடுக்கம்,வெடிகுண்டு பயம் இருக்க,ஏதாவது அவசரம்னாலும் உடனே ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாது,நானும் சொல்லி அலுத்து போயிட்டேன்னு சொல்லுவாங்க.... வ.இந்தியாவிற்கு இன்னொரு முறை உன்னை அழைத்து வந்து மற்ற பிற இடங்களை சுற்றி காமித்த பிறகு நம்மூரில் செட்டில் அகிடுவோம்னு சொல்லுவேன்,நேரம் வந்தால் தானாக கிளம்பி விடுவோமேன்பது கணவரின் வசனம் ...
ஹிந்தியும் தமிழும் குழந்தை புரிந்து கொள்வாளே தவிர இரண்டேகால் வயதாகியும் தெளிவான வார்த்தைகள் வரவில்லை,இரண்டரை வயதில் பள்ளியில் சேர்ப்பதில் எங்கள் யாருக்கும் விருப்பமில்லை என்றாலும் பேச்சு மற்றும் மொழி திறனுக்காகவும் சக வயது குழந்தைகள் ஹிந்தியில் சரளமாக பேசும்போது ப்ரி கேஜி யில் சேர்த்துதான் பார்ப்போமே என்று ரெண்டேமுக்கால் ப்ரி கேஜி சேர்த்தோம்.முதன் முதலாக குழந்தையின் பிரிவு பள்ளியில் தொடங்குகிறதென்று மனதில் பட்டது,இப்படியொரு பிரிவு வேதனை மனதிற்கு ரணமாகத்தான் இருந்தது, ஒருமணி நேரத்தில் அழைக்க போனபோது அம்மா என்று அழுதுகொண்டு பாய்ந்து வந்து கட்டிபிடித்து அழுத மகளை அந்த நிமிடங்களை என்னவென்று சொல்ல ...பிறந்த குழந்தையயை பார்த்த நிமிடங்களுக்கு மேலாக நெகிழ்ந்து போனேன்,இப்படியும் ஒரு வலி உள்ளதே என நொந்து கொண்டு ,குழந்தையின் நலத்திற்குதானே வழி இந்த வலி என மனதை கல்லாக்கி கொண்டோம்.நான்கே நாட்களில் குழந்தை ஆர்வமுடன் தானாக கிளம்ப ஆரம்பித்து விட்டது,ஏனெனில் வகுப்பில் நிறைய குழந்தைகள்,விளையாட வீட்டில் உள்ளதைவிட பல மடங்கு பொம்மைகள்.. இரண்டு மாதங்களில் நன்றாக ஹிந்தியும்,வீட்டில் நாங்க பேசும் தமிழும் மழலையாகவும் தெளிவாகவும் பேசத் தொடங்கினாள்.. அப்போ என் மாமியாரும் எங்களுடன் இருந்தாங்க.ஆனால் அம்மாவிற்கு வழக்கம் போல நான் கமெண்டரி கொடுப்பதும்,அம்மா அப்பா அங்கிருந்து குழந்தையயை பத்திரமாக அனுப்பு,என்ன லன்ச் கொடுக்கிற,பாப்பாவிற்கு என்ன பிடிக்கிறதோ செய்து கொடு,மகி குர்குரே கொடுப்பதை குறைத்துக்கோ, கோபப் படாத ,பக்கத்தில் உள்ள பிள்ளைகளுடன் விளையாட விடு,நீயும் கூடவே இருந்து கவனிச்சுக்கோ இத்யாதி ....
குழந்தைக்கு லேசாக உடம்பு சரியில்லை மருந்து கொடுத்து அனுப்பியிருக்கேன்னு சொன்னால் போதும்,இப்படி ஸ்கூல் போய் என்ன செய்ய போது,போய் அழச்சுட்டு வந்திடு, மேடம்க்கு போன் செய் ,கவனமாக பாத்துக்க சொல்லுனு தவிச்சுடுவாங்க இதனாலேயே அம்மாகிட்ட நல்ல மற்றும் சந்தோஷமான செய்திகளை மட்டுமே சொல்லுவோம்,எங்களுக்காக போன் பேச கத்துகிட்ட அம்மாவிடம் போனில் பேச என் குழந்தையும் கத்துக்கொண்டாள். போனில் குழந்தை பேசுவதை கேட்டு அம்மாவும் வீட்டில் அனைவரும் அவ்ளோ சந்தோஷப்படுவாங்க.அதுவும் ஹிந்தியில் பேசினால் அவங்களுக்கு புரியாது ஆனாலும் அவ்ளோ சந்தோஷப்படுவாங்க,அம்மாவை பாட்டி மற்றும் அம்மாச்சினு கூப்பிட பிடிக்கல எனவே (அம்மா பெயர் இராஜாமணி அப்பா அம்மாவை 'மணி' னுதான் கூப்பிடுவாங்க )எங்க பாப்பாவையும் 'மணி' என்றே கூப்பிட சொல்லிக்கொடுத்தோம்,அம்மாவிடம் பேசும்போதும்,கூப்பிடும்போதும்,வார்த்தைக்கு வார்த்தை 'மணி' 'மணி'னு சொல்வதை கேட்டு அம்மா மிக சந்தோஷப்படுவாங்க.சில பேர் 'என்ன இப்படி பேர் சொல்லி மரியாதை இல்லாம கூப்பிடற'னு சொல்வாங்க ஆனால் அம்மா குழந்ததான,பெரியவளானவுடன் மாத்திக்க்கலாம்பாங்க.குழந்தை பிரசவிக்கும் முன்னும் பின்னும் அத்தனை சேவைகளும்,அன்பின் உருவமாகவும்,பரிதவிப்பினுடனும் வாழ்ந்த அம்மா,தன் மகளையும் {பேத்தியை மூன்று மாத குழந்தையில் அனுப்பி வைத்தார்கள்} பேத்தியையும் தன்னுடன் தொடர்ந்து பத்து நாட்களாவது தங்க வேண்டும்னு ஆசைப்படுவாங்க,குழந்தையின் மூன்றரை வயதிற்குள் வருடத்திற்கு மூன்று முறை தமிழகம் சென்றாலும் மாமியார் வீடு ,அம்மா வீடு,பிரண்ட்ஸ் வீடு,கோவில்கள்னு போவதால் அம்மாவுடன் ஒரு வாரம் கூட தொடர்ந்து தங்க முடியாது.அப்பாவும் கணவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்னு சொல்லிடுவாங்க.
அம்மாவுடன் அதிக நாள் தாங்கும் ஆசை தங்கையின் திருமணத்தில்தான் நிறைவேறியது.தங்கையின் திருமணத்தை காரணமாகக் கொண்டு அம்மாவுடன் ஆசை தீர குழந்தையுடன் ஒன்றரை மாதம் தங்கினோம்.{அந்த நாட்கள்தான் அம்மாவுடன் சேர்ந்திருக்கும் கடைசி நாட்கள்னு எங்களுக்கும் அம்மாவிற்கும் தெரியவில்லை}வேதனைப் பட்டார்கள் என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன், நானும் குழந்தையும்தான் அம்மாவிற்கு ஆறதலாக இருந்தோம்.அம்மாவை தேற்றவே முடியாதளவிற்கு வெம்பி வேதனை பட்டாங்க.வ.இந்தியா புறப்படும்போது அம்மாவையும் அழைத்து போகனும்னுதான் ப்ளான், அம்மாவும் ஆசையா இருந்தாங்க,வ.இந்தியா புறப்பட தயாரானதிலிருந்து அம்மாவிற்கு மனதே சரியில்லை,முகத்தில் தெளிவில்லை,ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால்{பெரிய தவறு செய்துட்டேன்}அம்மாவை விட்டுவிட்டு மாமியாரை அழைத்து சென்றோம்.அம்மாவுடன் தனியாக இருக்க ஆசைப்பட்டேன்,எனவே அம்மாவை அடுத்த முறை அழைத்து போகலாம்னு அலச்சியமாக கிளம்பினேன்,எனக்குத் தோன்றிய அட்வைஸ்களை சொல்லிவிட்டு கிளம்பினோம்.விடிய காலையில் எழுந்து சாப்பாடு செய்து எங்களை தயார் செய்து அப்பா அம்மா தம்பி அனைவரும் வந்து பஸ் எற்ற வந்தாங்க.{அந்த ஐந்து நிமிட பஸ் பயணம்தான் என் அம்மாவுடன் சேர்ந்த போன கடைசி பயணம்னு தெரியாமல் போனோம்.}.ஒருவருக்கொருவர் அழுவதையும் வருத்தப்படுவதையும் அவரவர் கட்டுபடுத்திக் கொண்டது புரிந்தது.அந்த நாகை பஸ் ஸ்டாண்டில் நின்று பார்த்ததும் பேசியதும் என் மகளுக்கு பிரூட்டி வாங்கி கொடுத்ததும் ,அடுத்தமுறை வரும்போது நிறைய முடியுடன் வரணும்,அப்பத்தான் பூ வைக்கலாம்னு சொன்னதும்,பஸ்ஸில் உக்காந்த பிறகும் போக மனமில்லாமல்,பாப்பா டாட்டா டாட்டான்னு கை காமித்ததும்,பத்ரமா பாப்பாவ பாத்துக்கோ என்றதும் அம்மா அந்த மெருன் கலர் சேலையில் பஸ் எடுத்த பிறகும் சில வினாடிகள் பார்க்க முடிந்ததும் எல்லாம் இப்போ நடந்த மாதிரி இருக்கு ,என்னால் நம்பவே முடியல எங்களுடன் முழுமையான கடைசி சந்திப்பு,பிரிவுன்னு யாருக்கும் புரியல,தெரியல.
நாகையிலிருந்து என் மாமியார் வீட்டுகுதன் சென்றோம்,அங்கிருந்து இரண்டு நாட்களுக்கு பிறகு தமிழ் நாடு எக்ஸ்ப்ரசில் செல்ல புக்காகி விட்டது,அம்மாவும் மாமியார் வீடு வரை வந்து போவதாக சொன்னங்க,ஆசைப்பட்டாங்க,ஆனால் நானொரு பாவி இதுதான் கடைசி சந்திப்பென்று தெரியாமலும்,அம்மாவிற்கு எதற்கு வீண் சிரமம் அங்குமிங்கும் அலைந்து கொண்டேன்று நினைத்து,ஏம்மா உனக்கு சிரமம்,நாமதான் போனில் பேசிக்க போறோம்,மாமியார் தமிழகம் வந்தவுடன் அப்பாவையோ,தமிபியையோ அழைத்துக்கொண்டு நீ கட்டாயம் வாம்மான்னு சொல்லிட்டேன்,அம்மாவும் மறுப்பு சொல்லல,ஒன்றரை மாதம் அம்மாவுடனிருந்தும் திருப்தி படமாற்றாங்கலேன்னு சின்ன வருத்தமுடன் கிளம்பினேன்.நான் மாமியார் வீடு செல்லும்போது மதியம் ரெண்டு மணி,காலை ஆறு மணிக்கு பஸ் ஏற்றிவிட்டு வந்து படுத்த அம்மா ரெண்டு மணி வரை சாப்பிடாம, எந்திரிக்காம மன அழுத்தத்தில் இருந்திருக்காங்க,றேன்து நாட்களில் நாங்களும் வ.இந்தியா வந்தோம்.சாதரணமாக உடல்நலம் சரியில்லேன்னா சில நாட்களில் சரியாகிடும்னு நினைத்தோம். நான்கைந்து நாள் அப்படியும் இப்படியுமா சமாளித்தவங்களுக்கு அதற்குமேல் சமாளிக்க உடம்பிலும் மனதிலும் சக்தி குறைந்துவிட்டது.
இத்தனை அன்பு மிக்க அம்மாச்சியுடன் வாழ என் மகளுக்கு மூன்ரை வயது வரை வாழத்தான் கொடுப்பனை கிடைத்தது.எங்களை வழியனுப்ப வந்த அம்மாவை இருபத்தைந்து நாளில் உலகத்தை விட்டு வழியனுப்பதான் வந்தோம்.
No comments:
Post a Comment