Friday, November 19, 2010

(இ). என் திருமணம்

                    எல்லா குழந்தையும் நல்ல குழந்தைகள்தான் மண்ணில் பிறக்கையிலே,நல்லவராவதும்,தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்பது என்னை பொறுத்தவரை கால் பகுதிதான் உண்மை,மீதி முக்கால்  பகுதி  பிள்ளைகள் வளரும் சூழ்நிலையை   பொறுத்துதான் என்று சொல்லுவேன்.
                                         
                     மிடில் கிளாஸ் பெண்ணாக,பிரச்சனைகளுடன் அன்பு  நிறைந்த, அன்பையும் ஒற்றுமையையும்  எப்படி பகிர்வது  பற்றிய பக்குவமில்லாத குடும்ப நபர்களுடனும்,  என் மீது கண் மூடித்தனமான பாசம் வைத்திருந்த அம்மாவுடனும்,அவசியமில்லாத மன கஷ்டங்களையும்,ஏமாற்றங்களையும் பருவ வயதில் பெற்றவளாய்,என்ன செய்ய போகிறோம்,வாழ்க்கையின் அர்த்தமென்ன?,எப்படி வாழ்வது என்று கற்றுக்கொள்வதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடும் என்று யாரோ  சொன்னதாக எதிலோ படித்துள்ளேன்.இப்படியான எனக்கு திருமண வாழ்வைப்பற்றிய பயம்,கேள்விக்குறி எல்லாமே இருந்தது.
                              
                              என் வளர்ச்சியும்,சந்தோஷமும் தன் மூச்சாக கொண்ட என் அம்மாவை அடுத்த கட்டமாக கண்ணீர் விட நானே காரணமானேன்.கலப்பு திருமணம் செய்துகொள்ள நான் முடிவெடுத்ததுதான்முக்கிய காரணம்.ஹிந்து மதம்தான் சாதி பிரிவுதான் வேறு.என்னை விரும்பியவர் பல பிரச்சனைக்குரிய சூழ்நிலை வந்தபோதும் என்னைவிட மனம் தளராதவராய் நல்லபடியாக திருமணம் செய்துகொள்ள தன்னால் முடிந்த வழிகளிலும்,விட்டுகொடுத்தும்,அனுசரித்தும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் எங்கள் காதல் திருமணம் நடந்தேறியது.
                                   
                                என் திருமணம் முடிவதுற்குள் அம்மாவின் முழு உயிரும் கண்ணீரில் கரைந்து விட்டது எனலாம்.திருமணத்திற்கு கணவர் வீட்டில் எந்த தடையும் இல்லை.என் பெற்றோருக்கு (மிடில் கிளாஸ்)பெற்றோருக்கே உரித்தான முதல் பயம் பெண்ணின் வாழ்க்கை நல்லபடியாக அமையுமா ?இரண்டாவது கலப்பு திருமணம் செய்துக்கொண்டால் உறவினரால் ஒதுக்கபடுவோம்,ஊராரின் ஏளனத்திருக்கு ஆளாவோம் என்பதுதான்.தற்காலத்தில் எத்தனையோ இது போன்ற திருமணங்கள் நடந்தாலும்,என் அப்பாவின் கண்களுக்கு பல தோல்வியுற்றோரின் வாழ்க்கை சம்பவங்களும் சாதி பிரிவும்தான் முன் நின்றது.நானோ நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை தோல்வி/வெற்றி அடைந்தாலும் பரவாஇல்லை நீங்கள் தேர்வு செய்யும் வாழ்க்கைக்குள் நுழையமாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தேன்.முதன் முதலாய் அப்பா அழுதும் பார்த்தேன்.அப்பாவை அழ வைத்துவிட்டேனேன்றுதான்  சொல்ல வேண்டும்.நானும் வருத்தபடுவேன் அழுவேன்,அனால் என் முடிவில் உறுதியாக  இருந்தேன். வீட்டு கைதி என்று சொல்லுமளவிற்கு சில நாட்களும் சென்றது.எங்களுக்குள் தெய்வீக காதல் அப்படி இப்படி என்று சொல்லி நாங்கள்  உறுதியாக இல்லை.ஒருவருக்கொருவர் பிடித்திருக்கிறது,என்னைவிட திறமையானவர்,குறிப்பாக  எளிமையானவர்,எதிலும் பக்குவம்பெற்றவர்.தெரியாத ஒருவரை விட அறிமுகமான  நல்ல குணமுடயவருடுன் வரபோகும் வாழ்நாட்களை மனதிற்கு பிடித்தவருடன் வாழலாம்,நல்லது கெட்டதுகளை சமாளித்து கொள்ளலாம் என்பதில் உறுதியாக இருந்ந்தோம் .ஆனாலும் சில சூழ்நிலையில் என் மனம் தடுமாறத்தான் செய்தது.
                                அம்மாவும் அம்மாவின் மூலமாக அப்பவும் தங்கள்  வகுப்பில் திருமணம் செய்துகொள்ள  எத்தனையோ முயற்சிகள்  செய்தனர்.என்ன  செய்வதென்று புரியாத  அப்பா அம்மாவிற்கு  மனகஷ்டத்தை ஏற்படுத்தினால் அம்மா பாசத்தினால் மனமாறிடுவேனும் முயற்சித்தார்.அம்மா இரு தலை கொள்ளியாய் கணவனிடமும் மகளினுடனும் சிக்கி தவிச்சாங்க.   பல சங்கடங்களுக்கு பிறகு,என் தோழிகள்,தோழிகளின் பெற்றோர்,முக்கியமாக எனக்கு பம்மி என பெயரிட்ட மாமா ஆகிய  அனைவரின் முயர்சியுடன் சொல்வதைவிட அவர்களின் ஆதரவுடன் என் அன்பிற்குரியவரின்  உறவினர்கள்,எனது சில உறவினர்  மற்றும் எங்கள் பெற்றோரின் ஆசியுடன் ஒருவழியாக எங்கள் திருமணமும்,அப்பாவின் நண்பர்கள் ஆதரவுடன் வரவேற்பும் நல்லபடியாக நடந்து முடிந்தது.விரும்பியவரை மணம் செய்துகொண்டாலும்,நமக்கு திருமணம் நிகழ்கிறதன்ற  சந்தோஷமும்,நம்பிக்கையும்  உணரும் படியான சூழ்நிலைகள் இல்லாமலே   நல்லபடியாக நடந்தது. எனக்கோ சவாலான புது வாழ்க்கைக்குள் நுழைகிறோம் என்றாலும் அப்பாவை விட அம்மாவை பிரிவதுதான் பெரிய மன பாரம்.கணவர் வட இந்தியாவில் வேலை பார்ப்பதால்,எனது வாழ்க்கை மிக வித்தியாசமாகவும்,இதுவரை பார்க்காத கலாச்சாரங்கள்,சூழ்நிலைகள்,மனிதர்கள் என புதுமையாகவே தொடங்கியது.அங்கும் எனக்கு உதவவும் வழிகாட்டவும் ஒரு தமிழ் குடும்பம் கிடைத்தது. 
             
                          திருமணத்திற்கு முன்போ பின்போ எத்தனை புரிதல்கள் இருந்தாலும் வீட்டுக்கு வீடு வாசல் படி என்பது போல அதே புது சூழலும்,தனிமையும்,கடந்த காலங்களாலும் ஊடலும், கூடலுமாய் சென்றது.தனிமையும்,தமிழ்நாட்டிலிருந்து இத்தனை தூரமுமே எங்களுக்குள் சில சங்கடங்கள் ஏற்படவும் சமாதானம்  பெற காரணமாக அமைந்தது. நடந்த ஒவ்வொன்றும்  எங்களுக்குள் அன்பை ஆழப்படுத்தவும்,திருமணத்திற்கு முன் எத்தனை ஆழமாக விரும்பினாலும் ,திருமணத்திற்கு பின்தான்  24 மணி நேரமும் நமது வாழ்க்கைத்துனயுடன் (வாழ்கிறோம்)வாழும்போது எத்தனை புரிதல்கள் தேவைப்படுகிறது என்பது தெரியவந்தது.எங்களுக்குள் அதிக விட்டுகொடுத்து போனவரில் அதிக வாக்கு என் கணவருக்குத்தான்.தம்பதிகளுக்குள் மன வருத்தமும்,குழப்பங்களும் வருவதற்கு காரணமே ஒருவருக்கொருவர் அன்பை எப்படி பரிமாறிக்கொள்வது பற்றி தெரியாமல் போவதும்,தெரிந்தாலும் ஈகோ வாக இருப்பதும்தான்.என்  குடும்பம் முதல் தோழிகள்,அண்டை  அயலாரின்  வரை  குடும்பம் பல சங்கடங்கள் ஏற்பட்டபோது  நாம் வேடிக்கை பார்ப்போராய், தூரத்திலிருந்து பார்க்கும்போது நம் ஆறாவது  அறிவிற்கு தவறு யாரிடம் உள்ளது இவர் இப்படி செய்தால்  சமாதானம் கிடைக்கும் என்றெல்லாம் தோன்றினாலும்,நமக்கென்று சங்கடங்கள் வரும்போது ஆறாவது அறிவு குன்றித்தான் போகிறது.

                             எது எப்படியோ என் அப்பா எதிர்மறையாக  எதிர்பார்த்தது போல் இல்லாமல்  அப்பா அம்மாவிற்கு நம்பிக்கை உடையவராய்,நாளடைவில் நாங்கள் பார்த்திருந்தால் கூட இப்படி ஒரு மாப்பிள்ளயயை உனக்கு தேர்வு செய்திருக்க முடியாதுன்னு சொல்ற அளவிற்கு உணரப்பட்டார் என் கணவர்.என் கணவரும் என் திருமண  வாழ்வும் நல்ல ஆசிகளின் சக்திகளின் பரிசளிப்புதான். மீதமுள்ள காலமும் நல்லபடியாக அமைய அதே நல்ல சக்திகளின் ஆசிர்வாதங்களை வேண்டுகிறேன்.      
                 

No comments:

Post a Comment