Sunday, November 28, 2010

(ஈ) என் திருமணத்திற்கு பிறகு அம்மாவின் மகளாய்!!!

                                     அம்மாவின்   கண்ணீரில்   மிதந்துதான் வட இந்தியாவுக்கு வந்தததாக சொல்ல வேண்டும். அத்தனை  குழப்பங்கள், சங்கடங்கள், இப்போது நினைத்தாலும்  எப்படி   சமாளித்தோம், எங்கிருந்து  தைரியம்  வந்ததென   யோசிக்க வைக்கிறது. எங்களுக்கு  ஜூனியர்  பிறக்கும் வரை  அம்மாவின் நிலை  பரிதவிப்பாகவே  இருந்தது. ஆனாலும் அம்மாவிற்கு  தன்  மருமகனை பற்றியும்  மகள் வ.இந்தியாவில் குடும்பம்  நடத்துவது  பற்றியும்   பெருமையும் சந்தோஷமும்தான். அப்பாவிற்கும் எனக்கும்  சமாதானம்  ஆகும்  வரை அம்மா  எதிர் கொண்ட  சம்பவங்களுக்கும், சங்கடங்களுக்கும்   எந்த   ஜென்மத்திலும்  கைம்மாறு செய்யமுடியாது.  அப்பாவும்   கொடூரமானவர்   அல்ல, சமுதாய  சூழலுக்கும், என் எதிர் காலத்துக்காக்கவுமே அப்படி  நடந்து   கொண்டார்.

                               திருமணத்திற்கு பிறகு அம்மாவை விட்டு சென்றது வெகு தொலைவென்றாலும் மனதளவில் இத்தனை வருடங்களைவிட   ஒருவருக்கொருவர்  பேசிக்கொண்டதும்,  பழகிகொண்டதும், விசியங்களை  பரிமாறிக்கொள்வதும்  அதிகமாக இருந்தது.ஒரே வீட்டில் அம்மா அருகிலிருந்தபோது  கிடைத்த பாசத்தைவிட  மிக  அதிகமாக கிடைக்கபெற்றேன். எங்கள் பிரிவையும், தொலைவையும் இல்லாமல் ஆக்கியவர் யார் தெரியுமா? அந்த முக்கியமானவர் திருவாளர் செல்போன்தான். அம்மவிற்கென்று தனி மொபைல் வாங்கும் வரை டெலிபோன் பூத்துக்கு சென்று பேசி   பழக்கமில்லாதவர், எனக்காக கற்றுக்கொண்டார். std  பேசுவதற்காக  வீட்டிலிருந்து வந்து போகும் சிரமம் பற்றியும் சொல்வாங்க, எத்தனை  சிரமங்கள்  இருந்தாலும்  என்னிடம் 10  நிமிடம் பேசினால்தான்  நிம்மதியடைவாங்க. அம்மா செல்போன்  வாங்குவதற்கு முன் தம்பி, தங்கையிடம் ட்ரைனிங் எடுத்ததை   மறக்க முடியாது, அம்மவிற்கென்று  தனி  செல்போனே வந்தபிறகு  அம்மாவிற்கு ஒரு  பலமான  ஆதரவு  கிடைத்ததாக  சந்தோஷப்பட்டாங்க, ரீசார்ஜ்  செய்ய  அப்பாவையும், தம்பியையும் தேடினவங்க, தேவைப்படும்போது  தானே கடைக்கு  சென்று  ரீசார்ஜ் செய்யுமளவிற்கு என்னுடன் பேசும் ஆர்வத்தினால் முன்னேறினாங்க, நான் போன் செய்தால்கூட  நீ வை ஆட்சி நான்    பண்றேன்னு சொல்வாங்க,  இதற்கிடையில் நான் என் கணவரிடமும், அம்மா அப்பாவிடமும் அப்படி என்னதான் பேசுறிங்க, போனுக்கு   எவ்ளோ செலவு   பண்றதுன்னு   லேசான அர்ச்சனை   நடந்துகிட்டுதான் இருக்கும். அம்மாவை   நேராக  பார்க்க   முடியவில்லை என்ற   ஏக்கமும்   கூடவே   இருக்கும்.என்னை இன்னமும் குழந்தையாகவே நினைக்கும் அம்மாவிற்கு ஆர்தலளிக்கவே அன்பிற்குரிய கணவருடன் இருந்துகொண்டு அம்மாவுடன் இத்தனை கலந்துரையாடல்கள்,சொல்லப்போனால் அம்மாவுடன் போனில் பேசி  தனிமையை உணராமல் பார்த்துக் கொண்டதை தவிர அம்மாவிற்கு நான் வேறு எதுவும் செய்யவில்லை.எத்தனையோ பிரச்சனைகள் வந்த  போதும் அப்பாவை விட்டு பிரியாத அம்மா,மருமகனுடன்  மகள் மட்டும் வாழ்வதையே விரும்பினார் (மகள் பாசத்திற்காக மகளுடனே செல்ல விரும்பவில்லை)   
                            
                                            திருமணத்திற்கு முன் கணவரிடம்(காதலர்களாக இருந்தபோது) போனில்   அதை   சொல்லனும்,  இதை  சொல்லனும்னு  நினைப்பேன் , ஆனால் அவரிடம்   பேச  ஆரம்பித்தவுடன்  நான் சொல்ல வந்ததையும்,    பேச நினைத்ததும்  பாதிக்கு பாதி  மறந்துவிடும். அதே  போல  திருமணத்திற்கு பின்  அம்மாவிடம் நடந்தது.எங்களுக்குள் என்ன பேசுவோம் ------அம்மா "இப்படி சமைத்தேன்,இப்படி கமண்ட்ஸ் தந்தார் ,இது எப்படி சமைக்கணும்,எனக்கு சமையலே நல்லா வரமாடிங்குதும்மா,நாங்கள் அங்க போனோம் ,இங்க போனோம்,அதை பார்த்தேன் ,இதை பார்த்தேன்,இங்குள்ள வ.இந்தியர்கள் பற்றிய பழக்க வழக்கங்கள்,அம்மா தன்னுடைய தர்ம சங்கடங்களை பற்றி பேசுவது,உறவினர்கள்,தோழிகள் பற்றி பேசுவது,அம்மா எனக்காக கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வது,எத்தனையோ முறை அம்மா எதாவது கோவிலுக்கு செல்லும்போது 'நான் இன்ன கோவிலுக்கு செல்கிறேன்,நீ அங்கிருந்து இந்த சாமியை கும்பிட்டுக்கோனு' சொல்லுவாங்க  நான் அமாவிடம் ஆலோசனை கேப்பது போல அம்மாவும் என்னிடம் சில விசயங்களுக்காக ஆலோசனை கேப்பாங்க.
                               
                       போனில் அம்மாவாசை, கிருத்திகை,பிரதோஷ நாட்களை அம்மாதான் நினைவு   படுத்துவாங்க, கோவில் மற்றும் வெளி இடங்களுக்கு   செல்லும்போது யாரவது விசாரித்தாங்கன்னா&யார் வீட்டு விஷத்துக்கு போறாங்க,யார் இறந்துட்டாங்க இப்படி எல்லா மேட்டரும் பேசுவோம்.இத்தனை பேசினாலும் இவையெல்லாம் வீட்டு வேலைகளை முடித்துட்டுதான்  பேசுவாங்க.எத்தனையோமுறை அம்மா போனை எடுத்ததும் சாபிட்டியாம்மானு கேட்டால் இப்பதான் ஆச்சி வேலைய முடிச்சிட்டு உக்காந்தேன்,உன்கிட்ட பேசிட்டு பிறகு சாப்பிடறேன்னு சொல்வாங்க.ஏம்மா  இப்டி பண்ற ,போய் சாப்டுட்டு பேசும்மானு போனை வச்சிடுவேன்.நாளடைவில் சில சின்ன,சின்ன விசியங்களை பேசும்போது சொல்ல மறந்துடுவோம்னு சின்ன விசியம்னாலும் உடனுக்குடன் போன் எடுத்து பேச ஆரம்பிச்சோம்.
                                         
                                            உணவில் அக்கரைஎடுத்துக்க  மாட்டாங்க,எதாவது பழங்கள்  சாபிடும்மா,சும்மா தோட்டத்தயே சுத்தம் செய்துட்ருக்காத,கை ,கால் வலிக்குதுன்னு சொல்லற ட்ரசலாம் கிடக்கட்டும்மா ஒருநாள் விட்டு தொவச்சிபோடும்மான்னா கேக்கமாட்டாங்க,எல்லா வேலைகளையும் அன்னன்னிக்கே முடித்தால்தான் அம்மாவுக்கு நிம்மதியா இருக்கும்.சாப்பிடுவதெல்லாம் பிறகுதான்.நான் ஏதாவது அட்வைஸ் செய்தால் "போம்மா இருக்கறவரைக்கும் இருக்கேன்"னு சொல்வாங்க,இப்படிலாம் சொல்லாதம்மானு  வருத்தபடுவேன்.எது எப்படி இருந்தாலும் அம்மா மனசு வருத்தபட்டலும் வருத்தப்படுமே தவிர களைப்பு  மட்டும் அடையாது.என்ன  செய்தாலும் சுத்தமாகவும்,விரைவிலும் செய்து முடித்துட்டுதான் அடுத்த வேலைக்கு போவாங்க.உடல் களைப்பு அடையும்போது மட்டும்தான் ஓய்வு எடுத்துப்பாங்க,திருமணத்திற்கு முன்னும்,பின்னும் என் உடைகளைகூட என்னைய துவைக்க விட மாட்டங்க,அம்மாவின் அன்புமிக்க ஆளுமையில் எந்த அதிகாரமிருக்கது,வெகுளிதனம்தானிருக்கும்.அந்த அன்புமிக்க ஆளுமை என்னை சில நேரம்  லேசாக எரிச்சலடையவும் வைக்கும்,அந்த சமயங்களில் ஏம்மா இப்படி பைதயகாரத்தனமா  யோசிக்கிர,இது (ஏதாவது ஒரு விஷயம்)இப்படி இல்லமா அப்படிம்மானு சொன்னால் கூட ஏத்துப்பாங்க,ஆனால் எனக்கான அம்மாவின் பணிவிடைகளில் மறுப்பு தெரிவித்தால் அம்மாவால் தாங்கிக்கவே முடியாது.அம்மா என்னை இப்படி வளர்த்ததால் திருமணத்திற்கு பிறகு வீட்டு வேலைகள் செய்வதில்  சோம்பெரித்தனமானேன்,அம்மா எப்படி எல்லாத்தையும் மேனேஜ் செய்தாங்கனு யோசிப்பேன்.

                              எங்களுக்குள் மற்றொரு தொடர்பு   கொரியர் சர்விஸ். அம்மா எவ்ளவு மெனக்கிட்டு ஆவலாக செய்வாங்க தெரியுமா? வ.இந்தியா சென்றபோது   வீட்டில் காமாட்சி விளக்கேற்ற  திரி நூல் இல்லை ,சாமி படங்களுக்கு வைக்க சந்தன, குங்குமம் இல்லை.கடைகளில் என்ன பேர் சொல்லி விசாரிப்பதுன்னு  தெரியல,பிறகு விசாரித்ததில்  நம்ம ஊர் அகர்  பத்தியை தவிர  சந்தன,குங்குமம்,திரிநூல்,கல் சாம்பிராணி,நல்லண்ணை (எள் எண்ணை) போன்றவை  எங்கள் வட்டாரத்தில்  கிடைக்காதெனவும் 35 km தொலைவில் உள்ள கரோல் பக்ஹ என்ற இடத்தில்தான் கிடைக்குமென்றும் தெரிந்து கொண்டோம்,இதைப்பற்றி அம்மாவிடம் போனில் சொன்னவுடன்  அம்மா   அகர்பத்தி,எண்ணயை தவிர மீதமுள்ளவற்றை கூரியரில் அனுப்பறேன்னாங்க,சொன்ன ஒரு வாரத்தில் பார்சல் வந்தது,ஆச்சர்யமாக இருந்தது,அழகாக   பேக்   செய்து  அனுப்பியிருந்தாங்க ,இதற்கு முன் எந்த பார்சல் அனுப்புவதில் அனுபவமில்லாத அம்மா எனக்காக எப்படி அனுப்பினாங்கனு போனில் கேட்டபோது அம்மா சொன்னாங்க அனுப்பவேண்டிய பொருளை அட்டை டப்பாவில் பேக் செய்து என் தோழி ஒருவரின் உதவியினால்  அட்ரஸ் எழுதிக்   கொண்டு  கொரியர்  சர்விஸ்  கடையை  விசாரித்து,அதிலும் ஒரு சர்விஸ் எங்களுக்கு  இந்த  அட்ரஸில் செலுத்த இயலாதென  மற்றொரு  சர்விசை  காட்டியதால்   அங்கு சென்று கொடுத்தேன் செக் செய்துகொண்டு எடுத்துகிட்டாங்க னு சொன்னபோது எனக்கு சொல்ல ஒரு வார்த்தையும் வரல . அம்மா அங்க  தொடர்  வாடிக்கையாளர் ஆகிட்டாங்க எப்படின்னா   இங்கு கருவேப்பிலை,சாம்பார் பொடி (குழம்பு பொடி)  வடகம்,குழம்பில் போடும் வத்தல் வகைகள்  கிடைக்காது  ,அம்மா  இதெல்லாம் அவ்வப்போது அனுப்பிகிட்டே இருப்பாங்க                     

                                 ஏதாவது ஒரு காரணம் 5, 6, மாதத்திற்கு ஒருமுறை அமைந்துவிடும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு.மாமியார் வீட்டில் 4 நாள்,அம்மா வீட்டில் 4 நாள் தங்கிவிட்டு இடையில்  கோவில்,தோழிகள் வீடு இப்படி அந்த 10 ,15 நாட்களும் உலகத்திலே நான் மட்டும்தான் சுற்றுகிறேனோ என்ற மாதிரியான நினைவு,அம்மாவை பார்க்கபோகும்  சந்தோஷம்................
                                அம்மாவிற்கோ  நாங்கள் டிக்கட் புக் செய்த நாளிலிருந்து தூக்கமே வராதுன்னு சொல்வாங்க. நாங்க வருவதற்கு இன்னும் 15 நாட்கள் உள்ளதென்றால்,ஒவ்வொரு நாளும் போனில் பேசும்போதுலாம் 'ஆச்சி உன்னை பார்க்க 15 நாள் இருக்கு,14 நாள் இருக்கு,13 நாள் இருக்குனு நாட்களை எண்ணிக்கொண்டே இருப்பாங்க,சென்னைக்கு  ட்ரைன் ஏறி இறங்குவதற்குள் அம்மாவின் மனசு ஒரு நிலையாகவே இருக்காது,வழியில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாம நாங்க நல்லபடியா வீடு வந்து சேரனும்னு எல்லா தெய்வங்களையும் பிராத்திச்சிப்பாங்க,சென்ட்ரல் ஸ்டேசன் வந்து இறங்கி நாங்கள் போன் செய்வதற்குள் அம்மாவிடமிருந்து அழைப்பு வந்துவிடும்,என் கணவரோ ஒன்றும் சொல்லமுடியாமல் நொந்துகொள்வார்.(வழியபாத்து  நட,வீட்ல போய் பேசுங்க,நாம சின்ன பிள்ளைங்களா,பத்ரமா வரமாட்டமா,கிரிகட் கமெண்டரி மாதிரி சொல்லிகிட்டே வர என்பார் )மாமியார் வீடு அருகில் உள்ளதால் முதலில் சென்னையிலிருந்து  மாமியார் வீட்டில் தங்கிவிட்டு 3 ,4 நாட்கள்  கழித்துதான்  அம்மாவீட்டிற்கு நாகபட்டினம் செல்வோம்.அதற்குள் அம்மாவின் உடல் மட்டும்தான் அங்கிற்கும்,நினைவு அத்தனையும் என்னை பார்க்க போகும் வினாடிக்காக  ஏங்கிக்கொண்டிருப்பார்கள்.என் கணவரும் மாமிக்கு ஒரே மகன்,அவர்களும் தன் பிள்ளையின் மீது அதிக பாசம் கொண்டவர்தான்,ஆனாலும் அவர்கள் அன்பில் மெச்சூரிட்டி இருக்கும்,ப்ராக்டிகலாக  இருக்கும்.ஆனால் மருமகளை விட மகனுக்கு கவனிப்பு ஸ்பெசலாகதானிருக்கும்.என் அம்மாவோ ஒரு குழந்தை தன்  அம்மாவுடன் எப்படி பரஸ்பரமாக வாழ  விரும்புமா அப்படி 'தான்' அம்மவாகியும் தன் மகளிடம் இருந்தாங்க.

                                      அம்மா வீட்டுக்கு வரும்போது வாசலிலே நிற்பாங்க,எங்களை பார்த்தவுடன் படிய விட்டு இறங்கி வந்து அழைச்சிட்டு போவாங்க,அப்போ அந்த முகத்தில் அத்தனை பிரகாசம்,சந்தோஷம் தெரியும்.அம்மா எத்தனை அன்பாக இருந்தாலும் அந்த அன்பு எனக்கும் என் கணவருக்கும் இடைவெளி ஏற்படுத்தாது,இருவரையும் ஒரே மாதிரி கவனிப்பாங்க,எங்க ரெண்டு பேரையும் சேர்ந்து போக வச்சு அழகு பாப்பாங்க,பிறகென்ன நான் அந்த வீட்டை விட்டு கிளம்பும் வரை அம்மாவின் செல்போன் பேட்டரி சார்ஸ் கூட செய்யாமல் ஓய்வாக கிடக்கும்.ஊருக்கு  கிளம்புவதற்குள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அம்மா உட்காந்திருக்கும்போது  அம்மா மடியில் சிறிது நேரம் தலை சாய்த்து டி.வீ  பார்ப்பேன்,அல்லது ஏதாவது  பேசுவேன் . எங்களுக்கு குழந்தை பிறக்கும் வரை அப்பா என் மீதான கோபம் குறையாமளிருந்தார் {குழந்தை பிறந்தால் சரியாகிவிடுமென்பது என் வாழ்விலும் அப்பாவின் கருணையால் சரியாக இருந்தது},ஆனால்  முறையாக என்னென்ன  செய்ய வேண்டுமோ அதெல்லாம்  அம்மாவின் வழியாக அப்பா செய்திடுவாங்க,ஆனால் பேசமாட்டங்க.
                               எனக்கு குழந்தை பிறக்கும் முன்னும் சரி,பிறகும் சரி அப்பா அம்மாவை பார்க்க தமிழகம் வருவது எவ்வளவு சந்தோஷமோ அத்தனை சமமாக துக்கம் மீண்டும் வ.இந்தியாவிற்கு புறப்படும்பொழுது  அடைவோம்,நான் அழுதால் அம்மா தாங்கமாட்டர்கலேன்ரும் ,அவங்க வருத்தப்பட்டால் நான்  தாங்கமாட்டேனென்று  பெற்றோரும் ஒருவருக்கொருவர் வெதும்பி பிரிந்து செல்லும் அந்த தருணம் மிக்க கொடுமையானது.என்னதான் கையில் போன் வசதி இருந்தாலும் பிரிவு பிரிவுதான்.

                                 என்னை சந்தோஷப்படுத்தி திருப்தி அடைவதுமட்டுமாக   இருந்த அம்மாவிற்கு பெரிய திருப்பம், திருப்தி,மாற்றம் உண்டானது எனக்கு குழந்தை உண்டான பிறகுதான்.நான் ஏனோதாநோனுதான் குழந்தை உண்டானதும் ,பெற்றுதும்.ஏன்னா  எனக்கு குழந்தை பிறக்கப்போகிறதேன்ர சந்தோஷத்தை விட நான் 'அம்மாவாகப் போகிறேன்னா  '  , 'நாம் எப்படி ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்க்கபோகிறோம் 'என்ற பயமும் தான் அதிகமாக  இருந்தது..பிரசவத்திற்கு எல்லா பெண்களும் அம்மா வீட்டுக்கு போவாங்க,எனக்கு அந்த கொடுப்பனை இருக்காதுன்னு நினைத்தேன்,ஆனால் அம்மா தயவால் அப்பாவை சமாதனபடுத்தி மனதில் வருத்தமிருந்தாலும் எல்லாம் நிறைவாக செய்தாங்க.சிலரின் இடர்பாடுகளும்,வந்த சங்கடங்களையும் அம்மா எப்போதும்போல தன் தலை மேல்  வைத்து,கண்ணீர் கலந்த புன்னகையுடன் ஆச்சி உனக்காக எதுவும்  செய்வேன்னு வீட்டிற்கு வர ஏற்பாடு செய்தாங்க.
                               
                                 என் கணவர் என் பெற்றோருக்கு மரியாதையாகக்க  நடந்துகொல்வாரே தவிர அப்பா,அம்மா செய்யணும்னு எதையும் எதிர் பார்க்காமல்  தன்னால்  முடிந்ததை செய்வார், நல்லபடியாக செய்வார்கணவரிடமிருந்து முதன்  முதலாக பிரியாவிடை பெற்றுதான் பிறந்து சென்றேன்  பிரசவத்திற்காக...எனக்கு என் கணவர் எல்லாம் கலந்த ரூபம் ,{அதாவது அப்பா, அம்மா,தோழன்,அன்பான எதிரி,}அம்மாகிட்ட இருக்கோமேன்ற சந்தோஷத்தை 4 நாட்கள் கழித்துதான் மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தேன்,அது வரை  கணவரின் பிரிவை தாங்கமுடியாமல்  அழுதுகொண்டே இருந்தேன்.  அம்மா என்னை  கையில் வைத்து தாங்காத குறைதான்,பேருக்குதான்  குழந்தை  என் வயிற்றில் இருந்தது,என்னையும் என் கருவையும் ஒவ்வொரு வினாடியும் அம்மாதான் சுமந்தாங்கனு சொல்லனும்.
                            
                                    கர்ப்பவதிக்கு இதை செய்யணும் ,அதை செயயனும்னு உரிமையாக கேட்டு செய்ய முடியாத சூழ்நிலை இருந்தாலும்,அம்மா தன் சேமிப்பினாலானதை   செய்வாங்க,என் தோழி உதவியதையும்   மறக்க  முடியாது ,என்ன சாப்பிட்டா நல்லது,எப்படி உக்காரணும் ,படுக்கணும்,எந்த மாதத்தில் என்ன செய்யனும், சாப்பிடனும்,எல்லாம் அம்மா அக்கம் பக்கத்தினரிடம் கேட்டு,கேட்டு எனக்கு செய்வாங்க,அம்மா எனக்கு என்ன பணிவிடைகள் செய்தாலும் அப்பா தடை சொல்லமாட்டாங்க, அப்பாவிற்கு எதுவும் தானாக  செய்ய மனசிற்காது(என் மீது அத்தனை வருத்தம்)ஆனால் அப்பா  எனக்கு பிடிக்குமென்று  அசோகா  ஸ்வீட்டிற்கு ஏற்பாடு செய்து தந்ததை மறக்க முடியாது,அம்மா என்னை ஒவ்வொரு முறையும் செக்கப்புக்கு நாகையின்  பிரபல மருத்துவரிடம் அழைத்துச்  சென்றதை மறக்க முடியாது,குழந்தையை அழைத்துச்  செல்வது போல பார்த்து பார்த்து ஹாஸ்பட்டளுக்கு  அழைத்துச்  சென்றதும்,நான் சலித்துக் கொள்ளும் வரை அதையும், இதயும் வாங்கித் தந்ததும்,வீட்டுக்கு சென்றவுடனும் கால் வலிக்குதா,வயிற்றில் குழந்தையின் அசைவு தெரியுதா,நார்மலா இருக்கியானும்,அம்மா விசாரிப்பதை பார்த்து நொந்து போய் 'ஏம்மா இப்டி இருக்க,எனக்கு ஏதாவது  வேணும் /ப்ராப்லாம்னா  நானே சொல்றேம்மா,நீ அமைதியா இரு,நீ சாப்பிடு உன் உடல் நிலையிலும் கவனம் செலுத்துனு' கத்துவேன்.அம்மா டென்சனாயிடுவாங்க  'எப்படியோ போ'னு சொல்லிட்டு வேலைகளை கவனித்துவிட்டு பத்து நிமிடம் கூட ஆகியிருக்காது  ,'ஆச்சி  என்னம்மா பண்ற'னு வருவாங்க,....எப்படியோ அம்மாவின் முயற்ச்சியில் மண்டபத்தில் ஊராரின் முன்னிலையில் 9  ஆம் மாதத்தில் வளைகாப்பு நடத்தி கண்குளிர சந்தோஷப்பட்டாங்க. வளைகாப்புக்கு கணவர் இல்லை என்ற குறை மட்டும்தான்,ஆனால் கணவரின் உறவினர்கள்,மாமியார் உட்பட எல்லோரும் வந்திருந்தாங்க.

                           பிறகு ஒரு மாதத்தில் பிரசவம்.கணவர் மற்றும் குழந்தை வருகைக்காக காத்திருந்தோம்,அக்கம் பக்கத்தினரெல்லாம் பிரசவ அனுபவங்களை பற்றி சொன்னாலும் அம்மா என்னை கவனித்து பாதுகாப்பதில்தான் கவனம் செலுத்தினாங்க,அப்படிபட்ட அம்மா ஹாஸ்பட்டளுக்கு செல்லும் முன் 'ஆச்சி வலிக்கத்தான் செய்யும், பயப்படாத நான் வேண்டின தெய்வங்கள் நமக்கு துணை இருக்கும்னு  ' சொன்னபோதுதான் மன பதற்றம் ஏற்பட்டது .அம்மாவிற்கு தன் மகளின் குழந்தையை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சி ஒரு பக்கம்,தன் மகள் பிரசவ வேதனைக்குள்ளாக போகிறாளே என்ற வருத்தம்   மறு பக்கம்,பிரசவம் மறுபிறவி  என்பதை  அனுபவித்தேன்   என்பதோடு , எனக்கொரு   குழந்தை பிறக்க போகிறதா,நம்  வாழ்க்கையே  மாற  போகிறதா ,எப்படி  வளர்ப்போம்  என்ன    செய்வோம்,எந்த குறையும் இல்லாமல் எந்த குழந்தையாக இருந்தாலும் நல்லபடியாக பிறக்க வேண்டுமென்ற சிந்தனையுடன் சென்ற  எனக்கு பிரசவம் பெரிய ஆராய்ச்சியாக்கப்பட்டு, படாத பாடுபட்டு சிசரியன் செய்து மயக்கம் தெளிந்த பிறகு குழந்தையை பார்த்தேன்,குழந்தை முகத்தை  பார்த்தவுடன் சந்தோஷம்னுலாம் பொய் சொல்ல விரும்பவில்லை.
                                   
                                   முதலில் கேட்டு தெரிந்து கொண்டது ஆணா?,பெண்ணா?பதில்: பெண் குழந்தை.,குழந்தையின் கை காலெல்லாம் நல்லபடியா இருக்காணு   கேட்டபோது அம்மா திட்டினாங்க,ஒன்றும் குறையிலைன்னு  தெரிந்த பிறகுதான் எனக்கு மனது சந்தோஷமானது,குழந்தையின் அசைவுகளையும்,முகத்தையும் பார்த்து ரசித்தேன்,சந்தோஷப்பட்டேன் ,கூடவே நார்மல் டெலிவரி  முடியாமல்  சிசேரியன் செய்ய வைத்த இந்த பெண்ணை ரெண்டு போடும்மா  என்று செல்லமாக திட்டினேன்,உடனே எல்லோரும் சிரிச்சிட்டாங்க ,நான் சொன்ன இந்த வார்த்தையயை அம்மா அவ்வப்போது சொல்லி சிரிப்பாங்க. ஆபரேசன் தியேட்டருக்கு போகும்போது அப்பா,அம்மா,சித்தி,தம்பி தங்கை,தோழிகள்,அப்பாவின் நண்பர் எல்லோரும் பதட்டமுடன் நின்றதை பார்த்தேன்,ஆபரேசன் தியேட்டரிலிருந்து  நர்ஸ் குழந்தையை வீட்டாரிடம் கொடுத்து ஒரு மணி நேரத்திற்கு பிறகுதான் என்னை வார்டுக்கு கொண்டுவந்தாங்கலாம்,அம்மா ஆவலுடன் குழந்தையை சில நிமிடம் பார்த்துவிட்டு ஆபரேசன் தியேட்டர் வாசலிலே நான் வரும் வரை தவிப்புடன் நின்ருகொண்டிருந்தாங்கலாம்.என் முகத்தை பார்த்தவுடன்தான் அம்மா ஒரு நிலைப்பட்டர்கலாம்.அந்த நிமிடத்திலிருந்து என் அம்மாவிற்கு இரண்டு பெண் குழந்தையாகிவிட்டோம்.
                                                                                                                
                              சிசேரியன் என்பதால் என்னதான் நர்ஸ் ட்ரசிங் செய்தாலும் என் குழந்தைக்கும் எனக்கும் அம்மா ஒரே மாதிரியான பணிவிடைகள்தான் செய்ய  வேண்டியிருந்தது அலுக்காமல் முகம் சுளிக்காமல் செயய்தாங்க.இரண்டாவது நாள் கணவர் வந்துவிட்டார்,உண்மையில் குழந்தையயை பார்த்து என்னைவிட அதிக சந்தோஷப்பட்டார்.  அப்பா ஆகிவிட்டதில் என்னைவிட மகிழ்ச்சிதான் அவருக்கு .குழந்தையயை மிகவும் ரசிப்பார் . எங்கள் குழந்தை எங்கள் வாழ்விற்கு  திருப்பு முனையாக அமைந்தது என்பதைவிட அம்மாவிற்கு    திருப்பு முனையாக அமைந்தது எனலாம்.நானும் ,என் அப்பாவும்,என் குடும்பத்தாரையும் மட்டுமே   கொண்ட  அம்மாவின் உலகில் புதுவரவாக என்                மகள் வந்தாயிற்று. 
                   

No comments:

Post a Comment